Latest News :

’யாழ்’ விமர்சனம்

3527a1081dc053394d6214c4edf8636b.jpg

Casting : Vinod, Leema Babu, Neelima, Daniel Balaji, Misha

Directed By : MS Anand

Music By : SN Arunagiri

Produced By : MS Anand

 

இலங்கையில் போர் நடக்கும் சூழலில், ஆறு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களும், அதனுள் யாழ் என்ற இசைக் கருவி பற்றியும், அதன் வரலாறு பற்றியும் சொல்லப்பட்டிருப்பது தான் ‘யாழ்’ படத்தின் கதை.

 

இலங்கையில் போர் நடக்கும் சூழலில் தமிழர்கள் அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு கதையில், புலிகளின் முக்கிய பெண் போராளியான தமிழ் செல்வி என்பவரை இலங்கை ராணுவ வீரர் டேனியல் பாலாஜி தேடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கை குழந்தையுடன் இருக்கும் நீலிமா, தனது பெயர் செல்வி என்று அவரிடம் சொல்ல, தான் தேடும் தமிழ் செல்வி என்று நினைத்து நீலிமாவை பிடித்து டேனியல் பாலாஜி விசாரிக்கிறார். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடியில் டேனியல் பாலாஜி கால் வைத்துவிட, அந்த நேரத்திலும் நீலிமாவை விடாமல் அவர் விசாரிக்க, கண்ணி வெடி நிறைந்த அப்பகுதியில் இருந்து தனது குழந்தை காப்பாற்றும் முனைப்பில் நீலிமா இருக்கிறார்.

 

மற்றொரு கதையில், ஊரை விட்டு போகும் தனது காதலி லீமா பாபுவுடன் வினோத் செல்ல முயற்சிக்கும் போது, வழியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து அநாதையாக இருக்கும் சிறுமி ரக்‌ஷனாவை சந்திக்கிறார். அந்த சிறுமியை அவரது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு தனது காதலியுடன் செல்லலாம் என்ற முடிவுக்கும் வரும் வினோத், சிறுமியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

 

மூன்றாவது கதையில், தனது காதலனை சந்திதிக்க லண்டனில் இருந்து இலங்கைக்கு வரும் மிஷா, தனது காதலனை லண்டனுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்க, அவரோ இலங்கை ராணுவத்தால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை நீக்குவதே தனது முதல் வேலை, அதை செய்து முடித்துவிட்டு தான் இலங்கையை விட்டு வெளியேறுவேன், என்று கூறுகிறார்.

 

ராணுவ அதிகாரியிடம் சிக்கிக்கொண்ட நீலிமா தனது குழந்தையை காப்பாற்றினாரா இல்லையா, சிறுமியை அவரது அம்மாவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கும் வினோத் தனது காதலியை சந்தித்தாரா இல்லையா, கண்ணி வெடிகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும் தனது காதலரை மிஷா லண்டனுக்கு அழைத்துச் சென்றாரா இல்லையா, என்ற இந்த மூன்று கதைகளின் முடிவுகள் தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

மூன்று கதைகளின் முடிவுகள் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அதே சமயத்தில், இலங்கையில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலங்களையும் பின்புலத்தில் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் போர் காட்சிகளை குறைவாக வைத்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த், அதனால் தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், துயரங்களையும் நிறைவாக மட்டும் இன்றி ரொம்ப அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இலங்கையில் நடக்கும் போரை மட்டுமே மையப்படுத்தாமல், அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சொல்லப்பட்டிருப்பதோடு, யாழ் என்ற இசைக் கருவியின் பின்னணி பற்றி சொல்லியிருக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதிலும் டைடில் கார்டு போடும் போது வரும் பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் ஏ.கருப்பையா மற்றும் எம்.நஷீர் இலங்கையை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

 

ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்களது இன்னல்களை சொல்லும் படமாக ’யாழ்’ இருந்தாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் மூன்று கதைகளும், அதற்கான திரைக்கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது.

 

மொத்தத்தில், தமிழர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக உள்ளது இந்த ‘யாழ்’.

 

ஜெ.சுகுமார்