Latest News :

’காளி’ விமர்சனம்

fbdccdebf9d80fad7915c17fddbc580a.jpg

Casting : Vijay Antony, Anjali, RK Suresh, Nazar

Directed By : Krithiga Udhayanithi

Music By : Vijay Antony

Produced By : Vijay Antony Film Corporation

 

'பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் அம்மா செண்டிமெண்டோடு களம் இறங்கியிருக்கும் இந்த ‘காளி’ அவரை காப்பாற்றுமா? என்பதை பார்ப்போம்.

 

அமெரிக்காவில் தனது தத்து பெற்றோருடன் வாழும் மருத்துவரான விஜய் ஆண்டனி, தனது உண்மையான அம்மாவை தேடி தமிழகத்திற்கு வருகிறார். அவரது அம்மா இறந்துவிட்டதை தெரிந்துக் கொள்ளும் விஜய் ஆண்டனியிடம், அவரது அம்மா நிறைமாத கர்ப்பிணியாக வந்ததாகவும், அவருக்கு தான் தான் அடைக்களம் கொடுத்ததாகவும் கூறும் பெரியவர், அவரது அப்பா குறித்து எந்த தகவலும் தெரியாது, என்று கூறுவதோடு, அவரது அம்மா எங்கிருந்து வந்தாரோ அந்த ஊரை மட்டும் சொல்கிறார். அந்த ஊருக்கு சென்றால் தனது அப்பா யார்? என்று கண்டுபிடித்துவிடலாம், என்று அந்த ஊருக்கு செல்லும் விஜய் ஆண்டனி, அங்கு நேரடியாக தனது அப்பாவை தேடாமல், அங்கு க்ளினிக் ஒன்றை தொடங்கி அந்த ஊர் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்துக்கொண்டே, தனது அப்பா குறித்து விசாரிக்க, இறுதியில் அவரது அப்பாவை கண்டுபிடித்தாரா இல்லையா, அவரது அப்பா அவரது அம்மாவை ஏமாற்றக் காரணம் என்ன, என்பது தான் ‘காளி’ யின் மீதிக்கதை.

 

விஜய் ஆண்டனி படம் என்றால் இப்படித்தான் இருக்கும், அவர் இப்படித்தான் நடிப்பார், என்ற வரையறை இருக்கும். அந்த வரையறையில் இருந்து சிறிதளவும் மாறாமல் அப்படியே தான் இந்த படமும் இருக்கிறது.

 

மூன்று கெட்டப்புகளில் விஜய் ஆண்டனி வந்தாலும், மூன்றிலுமே ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சலிப்படைய செய்கிறது. அத்துடன், மூன்று கெட்டப்புகளிலும் அவருக்கு ஜோடியாக வரும் மூன்று ஹீரோயின்களின் வேடமும் ரொம்ப டம்மியாக இருப்பதால், எந்த போஷனும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

 

அஞ்சலி போன்ற நடிகையை வைத்துக் கொண்டு, திரைக்கதையில் அவருக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்காமல், அவரையே ஒதுக்கி வைத்துவிட்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, கதை சொல்வதில் தனது முதல் படத்தைக் காட்டிலும் இதில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்.

 

தனது எண்ட்ரியிலேயே ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும் யோகி பாபு, இதில் ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுவதை விட, காமெடியே வராத விஜய் ஆண்டனியோடு நடிப்பதற்கும், டைமிங் காமெடி செய்வதற்கும் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருப்பது அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.

 

நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி என்று படத்தில் வரும் சில முக்கியமான நடிகர்கள் தங்களது வேலையை சரியாக செய்தாலும், அவர்களது வேடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

நடிகராக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் இசையமைப்பாளராக சில படங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்திய விஜய் ஆண்டனி, இந்த படத்தில் அதையும் செய்ய தவறிவிட்டார். படத்தில் வரும் எந்த பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் எந்த இடத்திலும் நம்மை கவனிக்க வைக்கவில்லை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசமாக வந்திருக்கிறது.

 

அம்மாவை தேடிச் செல்லும் விஜய் ஆண்டனி, அம்மா இல்லை என்றதும் அப்பாவை தேட தொடங்கியதுமே, அவரது அப்பா இவராகத்தான் இருக்கும், என்று ரசிகர்கள் யூகித்துவிட, க்ளைமாக்ஸும் ரசிகர்களின் யூகத்தைப் போலவே முடிவது இப்படத்தின் மிகப்பெரிய மைனசாக அமைந்துவிடுகிறது. அதற்கு மேல், விஜய் ஆண்டனியின் அப்பாவை நெகட்டிவாக காட்டாமல் பாசிட்டிவாக காட்டுவதற்காக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, திரைக்கதையில் சேர்த்துள்ள ஜாதி பிரச்சினை சினிமாத்தனமாக இருப்பதோடு, ரொம்ப பழசாகவும் இருக்கிறது.

 

கதை தொடங்கும் இடத்திலேயே முடிவையும் சொல்லும் விதமாக திரைக்கதை அமைந்திருப்பதால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் சுவாரஸ்யமும் இல்லாமல் படம் நகர்கிறது. அப்பாவை தேடும் போது வரும் சிலரது பிளாஷ்பேக்கில் விஜய் ஆண்டனியை பொருத்தி காட்சிகளை ஓட்டும் ஐடியா ரசிக்க வைத்தாலும், அந்த இரண்டு எப்பிசோட்களில் வரும் காதல் காட்சிகள் உப்புச்சப்பு இல்லாமல் இருக்கிறது. 

 

மொத்தத்தில், விஜய் ஆண்டனியின் தோல்விப் பயணத்தை தொடரும் விதமாக அமைந்திருக்கும் இந்த ‘காளி’ அவரை காலாவதியாக்கிவிட்டது.

 

ஜெ.சுகுமார்