Latest News :

’கார்கில்’ விமர்சனம்

a0052e66bdf6001c2920e04494d6ba9e.jpg

Casting : Jishnumon

Directed By : Shivani Senthil

Music By : Vignesh Pai

Produced By : Subha Senthil

 

படம் முழுவதும் ஒரு நடிகர் மட்டுமே நடித்திருக்கும் வித்தியாசமான முயற்சியோடு வெளியாகியிருக்கும் படம் ‘கார்கில்’.

 

அவசர வேலையாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் செல்லும் ஹீரோவுக்கு போனிலேயே பல பிரச்சினைகள் வருகிறது. ஒரு கட்டத்தில் அவர் எதற்காக பெங்களூர் சென்றுக்கொண்டிருக்கிறாரோ அந்த விஷயமே அவரது கையைவிட்டு போகும் நிலை ஏற்பட, அவற்றில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், அவர் பெங்களூர் சென்றடைந்தாரா இல்லையா என்பது தான் ‘கார்கில்’ படத்தின் கதை.

 

கார் ஓட்டிச்செல்லும் ஹீரோ ஜிஷ்னுமோன் மட்டும் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவரைத் தவிர படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் செல்போனிலேயே வந்து போவது இப்படத்தின் வித்தியாசமான முயற்சி.

 

அமெரிக்காவில் இருந்து வரும் காதலியின் அப்பாவை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டிய ஹீரோ, அவசர வேலையாக பெங்களூருக்கு கிளம்ப, காதலியின் அப்பாவை வரவேற்கும் பொருப்பை தனது நண்பரிடம் கொடுக்கிறார். அந்த இடத்தில் தொடங்கும் பிரச்சினை அவரது காதல், பணி என அனைத்துக்கும் ஆபத்து ஏற்பட ஒரு கட்டத்தில், யார் என்றே தெரியாத ஒரு நபரால், போலீசுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஹீரோ உள்ளாகிறார். இவை அனைத்தையும் பெங்களூர் நோக்கி காரில் சென்றுக்கொண்டே தொலைபேசி மூலம் எதிர்கொள்ளும் ஹீரோ, அந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறார், அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது தான் திரைக்கதை. ஆனால், படம் முழுவதுமே ஹீரோ காரில் பயணித்துக்கொண்டே இருக்கிறார். சில இடங்களில் கார் நின்றாலும், அங்கேயும் எந்த ஆட்களையும் காட்டாமல், ஹீரோ ஒருவரை மட்டுமே படம் முழுவதும் காட்டியிருப்பது இப்படத்தின் தனி சிறப்பு என்று சொல்லலாம்.

 

இயக்குநர் சிவானி செந்திலின் இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டினாலும், காரில் பயணிக்கும் ஹீரோ தொடர்ந்து போன் பேசுவதும், அவருக்கு போன் வருவதும், என்றே படம் நகர்வது ரேடியோவில் ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம் போலவே இருக்கிறது. இருந்தாலும், ஹீரோ போனில் எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களை நேரில் காட்ட மாட்டார்களா! என்ற எதிர்ப்பார்ப்பும் நமக்கு ஏற்படும் அளவுக்கு அவர்களுக்கிடையிலான பிரச்சினையை இயக்குநர் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறார். 

 

ஹீரோவாக காரில் பயணித்திருக்கும் ஜிஷ்னுமோன், ஆக்‌ஷன் ஹீரோவையும், காதல் ஹீரோவையும் சேர்த்து செய்தவரைப் போல இருக்கிறார். காரில் உட்கார்ந்துக் கொண்டே படம் முழுவதும் நடித்திருக்கும் இவரது எக்ஸ்பிரஷன்களுக்கு குட் சொல்லலாம்.

 

ஒளிப்பதிவாளர் கணேஷ் பரம்ஹம்சா, இசையமைப்பாளர் விக்னேஷ் பை இருவரும் காரிலேயே படம் முழுவதும் பயணித்திருக்கிறார்கள்.

 

ஹீரோ கார் ஓட்டிக்கொண்டே போன் பேசுவதும், அவருக்கு சிலர் போன் செய்து பேசுவதுமே முழு படமாக இருப்பதால் சில இடங்களில் நமக்கு தலைவலி ஏற்பட்டாலும், போனில் பேசும் ஹீரோவின் காதலி, நிறுவன முதலாளியும் முன்னாள் காதலியுமான சிந்து, சிந்துவுடன் லிவிங் டூ கெதராக வாழும் கிங்க்ஸ், காதலியின் அப்பா, அவருடன் வரும் அமெரிக்க மாப்பிள்ளை, இவர்களுடன் ஹீரோவை அவ்வபோது டார்ச்செர் செய்யும் ராங் நம்பரான பீப் சகாயம் என அனைத்து கதாபாத்திரங்களும் சில இடங்களில் படத்தில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதே சமயம், காட்சிகளின் மூலம் அல்லாமல் பேச்சுகளின் மூலம் கதாபாத்திரங்கள் வந்து போவதால் படத்தின் மீது ஈர்ப்பு இல்லாமல் போகிறது.

 

மொத்தத்தில், சில இடங்களில் வரும் இரைச்சல்களை தாங்கிக் கொண்டு பொருமையோடு இப்படத்தை முழுவதுமாக பார்த்தால், ஒரு சாதாரண கதையை வித்தியாசமான கோணத்தில் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சிவானி செந்திலை நிச்சயம் ரசிகர்கள் வரவேற்பார்கள். 

 

ரேட்டிங் 2.5/5