Latest News :

’பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

96dd7b6ede78bb47db95466e952bd36d.jpg

Casting : Harish Kalyan, Raiza Wilson

Directed By : Elan

Music By : Yuvan Shankar Raja

Produced By : Yuvan Shankar Raja, S. N. Rajarajan, Irfaan Malik

 

முழுக்க முழுக்க காதலர்களுக்கான படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த ‘பியார் பிரேமா காதல்’ காதலர்களை கவர்ந்ததா என்பதை பார்ப்போம்.

 

பக்கத்து அலுவலகத்தில் பணிபுரியும் ரைசாவை ஒருதலையாக காதலிக்கும் ஹரிஷுக்கு ஷாக் கொடுப்பது போல அவரது அலுவலகத்தில் வேலைக்கு சேரும் ரைசா, அதைவிட பெரிய ஷாக்காக அவரே ஹரிஷிடம் வந்து பேசுகிறார். பேசுவதோடு மட்டும் இல்லாமல் ஹரிஷுடன் நெருங்கி பழகவும் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் ஹரிஷுடன் படுக்கையையும் பகிர்ந்துக் கொள்கிறார்.

 

இவ்வளவு நடந்துடுச்சே இதற்கு மேல என்ன, என்று ரைசாவிடம் ஹரிஷ் காதலை சொல்ல, ஷாக்காகும் ரைசா, உன் மேல காதல் வரல, ஜஸ்ட் பிரண்டாக தானே பழகுறேன், என்று சொல்ல, இப்படி செக்ஸ் வரைக்கும் வந்துட்டு காதல் இல்லனா எப்படி என்று ஹரிஷ், தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே அந்த இடத்தைவிட்டு சென்றுவிட, அதன் பிறகு தொடரும் இவர்களது நட்பு காதலாக மாறினாலும், கல்யாணத்திற்கு தடை போடும் ரைசா லிவிங் டூ கெதராக வாழலாம் என்று சொல்கிறார். அதெல்லாம் செட்டாகாது என்று சொல்லும் ஹரிஷ், ஒரு கட்டத்தில் ரைசாவின் விருப்பத்திற்கு ஏற்ப லிவிங் டூ கெதர் வாழ்க்கையை அவருடன் வாழ தொடங்கினாலும், சில நாட்களிலேயே அவரது பெற்றோருக்கு ஏற்ற பிள்ளையாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால், ரைசா நோ திருமணம் என்பதில் பிடிவாதமாக இருக்க, இந்த ஜோடி பிரிந்ததா அல்லது திருமணம் செய்துக் கொண்டு இணைந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

 

முதல் படத்திலேயே சர்ச்சையான விஷயத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் இளன், அதை படமாக்கிய விதத்தில் எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்தாமல், காதல், திருமணம், போல லிவிங் டூ கெதர் என்பதும் வாழ்க்கையில் ஒரு பகுதி தான், என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

முழு பீரை ஒரே சிப்பில் அடிக்கும், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மாடர்ன் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ரைசா, ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், போக...போக...நடிப்பில் பொளந்துக் கட்டுகிறார்.

 

சும்மா இருக்கும் ஒருவரை அடித்தாலும் அடிப்பேனே தவிர சரக்கு மட்டும் அடிக்க மாட்டேன், என்பதில் உறுதியாக இருக்கும் டீ டோட்லர் இளைஞராக, நடுத்தர குடும்பத்து வாலிபராக ஹரிஷ் கல்யாண், தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

 

ஹரிஷ் - ரைசா இருவரை சுற்றியே கதை நகர்ந்தாலும், ஹரிஷின் அப்பா, முனிஷ்காந்த், ஆனந்த் பாபு, இவனே, ஹரிஷின் நண்பர் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறது.

 

காதல் என்றாலே யுவன் தான், என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்த படத்தின் பாடல்கள். தனது இசை மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும் யுவன் சங்கர் ராஜா, பின்னணி இசையையும் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கிறார்.

 

ராஜா பட்டாச்சாரியாவின் ஒளிப்பதிவில் ஹரிஷ் - ரைசா மட்டும் இன்றி படத்தின் காட்சிகள் அனைத்தும் இளமையாக தெரிகிறது.

 

காதலின் அடுத்த கட்டாம் கல்யாணம் மட்டும் இல்ல, கல்யாணம் செய்துகொள்ளாமல் காதலர்கள் சேர்ந்து வாழலாம், என்பதை நியாப்படுத்தியிருக்கும் இயக்குநர் இளன், அதை இளசுகள் மட்டும் இன்றி அவர்களை சுற்றியிருக்கும் பெரியவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருக்கிறார். ஆனால், அவர் சொல்ல வந்ததை நியாப்படுத்துவதற்காக திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவற்றை பாரம் என்பது போலவே படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

ரைசா - ஹரிஷ் ஜோடியின் கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எந்தவித இமேஜும் இல்லாத இவர்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் எந்தவித சர்ச்சைக்குள்ளும் சிக்காமல், இயக்குநர் சொல்ல நினைத்ததை அழுத்தமாக சொல்வதோடு, இளசுகள் ரசிக்கும்படியாகவும் காட்சிகளை நகர்த்தி செல்கிறார்கள்.

 

ஹரிஷ், ரைசா இவர்களை சுற்றி நடக்கும் கதை ரசிகர்களை போரடித்துவிட கூடாது என்பதற்காக அவ்வபோது முனிஷ்காந்த் காமெடி மற்றும் இன்றி, ஹரிஷின் குடும்பம் மற்றும் அவர்களுக்காக காதலிக்க ஹரிஷ் பயப்படுவது போன்றவையும், கிளைமாக்ஸில் காதலர்களில் பிரிவு ஆகியவையும் சினிமாத்தனமாக இருக்கிறது. அதேபோல், ஹரிஷ் - ரைசா சந்தித்துக்கொண்டாலே கட்டில் காட்சிகளை காட்டுவது எல்லாம் இளசுகளை தியேட்டருக்கு வர வைக்கும் டெக்னிக்காகவே இருக்கிறது.

 

மொத்தத்தில் இந்த, ‘பியார் பிரேமா காதல்’ காதலர்களுக்காக மட்டும் இன்றி காதலிக்காத இளைஞர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.

 

ரேட்டிங் 3/5