Latest News :

’வட சென்னை’ விமர்சனம்

841b7f939ea2f8cffe2067b8d78387a1.jpg

Casting : Dhanush, Andrea, Aishwarya Rajesh, Ameer, Samuthirakani, Kishore

Directed By : Vetri Maaran

Music By : Santhosh Narayanan

Produced By : Wunderbar and Lyca

 

இயக்குநர் வெற்றி மாறன் -  தனுஷ் கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால், இவர்களது மூன்றாவது படமான ‘வட சென்னை’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, அந்த எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.

 

படத்தின் ஆரம்பத்திலேயே நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையை சுற்றி நடக்கும் பழிவாங்குதல், அரசியல் தான் படத்தின் கதை. அந்த கொலையில் நேரடியாக தொடர்புடையவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகளைப் போல, மறைமுகமாகவும் அக்கொலை பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படி அந்த கொலைக்கு சம்மந்தம் இல்லை என்றாலும், அந்த கொலையால் படத்தின் ஹீரோவான அன்பு என்ற வேடத்தில் நடித்திருக்கும் தனுஷின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும், அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தான் திரைக்கதை.

 

சமுத்திரக்கனியும், கிஷோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கொலை செய்ய, அதன் பிறகு இருவரும் தனி தனி கோஷ்டியாக பிரிந்து ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, கேரம்போர்டு பிளையரான தனுஷ் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்க, காலம் அவரை சமுத்திரக்கனி - கிஷோர் இடையே நடக்கும் கோஷ்டி மோதலில் சிக்க வைக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், கிஷோரும், சமுத்திரக்கனியும் யாரை, எதற்காக கொலை செய்தார்கள், அவரது பின்னணி என்ன, என்பதை கதையாக அல்லாமல் ‘வட சென்னை’ என்ற பதிவாக இயக்குநர் வெற்றி மாறன் சொல்லியிருக்கிறார்.

 

திரைக்கதையும், காட்சிகளும் எப்படி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறதோ அதுபோல் நடிகர்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள். கிஷோர், சமுத்திரக்கனி, பவன், ஜாவா பாண்டி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என அத்தனை பேரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதோடு, தங்களது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

 

ஹீரோயின் என்ற இமேஜ் பார்க்காமல், வட சென்னை பெண்ணாக கெட்ட வார்த்தை பேசி நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷும் சரி, கணவனின் கொலைக்காக பழிவாங்க துடிக்கும் மனைவியான ஆண்ட்ரியா, “என்ன தெவடியான்னு நினச்சிங்களா?” என்று கேட்கும் இடங்களிலும் சரி, தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

 

சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் படத்தின் சில நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, அவர்களை தொடர்ந்து வரும் அமீரின் எப்பிசோட் மரண மாஸாக இருக்கிறது. அதிலும் போலீஸ் அதிகாரியிடம் சில அடிகளை வாங்கிக்கொண்டு, அவர் கழுத்திலேயே கத்தியை வைத்து, அவரை கடலுக்குள் அழைத்துச் சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி தனது ஏரியாவை மீட்கும் காட்சிகள் அசத்தல்.

 

இப்படி படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் குறிப்பிட்ட சில நிமிடங்களை ஆக்கிரமித்தாலும், அவர்கள் அனைவருடனும் பயணிக்கும் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேரு விதமான நடிப்பைக் கொடுத்து நம்மை கவர்ந்துவிடுகிறார். பங்க் முடியுடன் கேரம்போர்டு பிளையராக வரும் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்க தொடங்கியதும் லவ்வபல் பாயாக வலம் வருபவர், சிறைக்குள் நடக்கும் சம்பவத்தின் போது கிளாஷான நடிப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு சமுத்திரக்கனியை எதிர்க்கும் போது மாஸான நடிப்பை வெளிக்காட்டுபவர், இறுதியில் ஒட்டு மொத்த படத்தையும் தன் மீது தூக்கி சுமப்பவராக உயர்ந்து நின்றுவிடுகிறார்.

 

தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறைச்சாலை மற்றும் அதில் நடக்கும் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த அளவுக்கு ஒரிஜினலாக சிறையைக் காட்டியிருப்பார்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறைச்சாலை செட்டாக இருந்தாலும், அது தெரியாத அளவுக்கு வேல்முருகனின் கேமாரா பணி அசத்தல். சிறைச்சாலை மட்டும் இன்றி வட சென்னை குடிசைப் பகுதி செட்டும் சூப்பர்.

 

1980 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கும் படம் ஒவ்வொரு காலக்கட்டமாக முன்னும், பின்னும் என்று நமக்கு கதை சொல்லப்பட்டாலும், அவை எந்தவிதத்திலும் குழப்பம் இல்லாமல் நமக்கு புரியும்படி எடிட்டர்கள் ஜி.பி.வெங்கடேஷ் - ஆர்.ராமார் கத்திரி போட்டிருக்கிறார்கள்.

 

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், மாண்டேஜாக வரும் கானா பாடல்களும் கதையுடனே பயணித்திருப்பதோடு, வட சென்னையின் ஒரு கதாபாத்திரமாகவும் பயணிக்கிறது.

 

கொலையுடன் படம் தொடங்கினாலும், காட்சிகளில் வன்முறையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வட சென்னை மக்கள் கோபம் வந்தால் சாதாரணமாக பேசும் வார்த்தையை ரொம்ப இயல்பாக பயன்படுத்தியிருப்பதோடு, “அது என்ன வார்த்தை, அப்படினா அர்த்தம் என்ன” என்று பலர் கேட்கும்படி, பல இடங்களில் அந்த வார்த்தையை அழுத்தமாகபயன்படுத்தியிருக்கிறார்.

 

இப்படி அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கதாபாத்திரங்களும் இயல்பாக பேசும்படி வைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வசனங்கள் மூலமாகவும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

 

தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக மட்டும் இன்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு திரைப்படமாக ‘வட சென்னை’ இருந்தாலும், வன்முறை சரி தான் என்று இளைஞர்களை தூண்டுவிடும் விதத்திலும் படம் இருக்கிறது.

 

இப்படத்தை தொடர்ந்து இன்னும் இரண்டு பாகங்களை எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கும் இயக்குநர் வெற்றி மாறன், அவற்றில் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த முதல் பாகத்தில் வசனம் மூலமாகவும், சில காட்சிகள் மூலமாகவும் பிரச்சினை என்று வந்துவிட்டால் அதற்கு தீர்வு வன்முறை தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

ரஜினி சிகரெட் பிடிப்பதை பார்த்து சிகரெட் பிடித்த கூட்டம், தனுஷ் கத்தி எடுத்து வெட்டுவதை பார்த்து கத்தி எடுக்காதா என்ன?

 

மொத்தத்தில், சினிமாவாக பார்த்தால் ‘வட சென்னை’ நல்ல படம் தான், ஆனால், வாழ்வியல் பதிவாக பார்த்தால் மக்களுக்கான பாடமாக இல்லை என்பதே உண்மை.

 

ரேட்டிங் 3.5/5