Latest News :

’ஒரு கனவு போல’ விமர்சனம்

8439266f0496fd4b91acedfa2e4092c9.jpg

Casting : ராமகிருஷ்ணன், சௌந்தரராஜா, அமலாரோஸ், அருள்தாஸ், சார்லி மற்றும் பலர்

Directed By : விஜய்சங்கர்

Music By : ஈ.எஸ்.ராம்

Produced By : சி.செல்வகுமார்

 

பெற்றோர் இல்லாத சவுந்தரராஜாவின் நண்பரான ராமகிருஷ்ணா அவரை தனது நண்பராக பார்க்காமல் தனது சகோதரனாக பார்க்கிறார். பின்னணி பாடகராகும் முயற்சியில் உள்ள சவுந்தரராஜாவுக்கு, லாரி டிரைவரான ராமகிருஷ்ணன் பல உதவிகளை செய்து வருகிறார். ராமகிருஷ்ணனுக்கு ஹீரோயின் அமலா ரோஸை பெண் கேட்க, அவர் லாரி டிரைவர் என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், ராமகிருஷ்ணனுக்கு அமலா ரோஸை பிடித்துவிட்டதால், பெண்ணிடமும், அவரது பெற்றோரிடமும் சவுந்தரராஜா பேசி சம்மதம் வாங்குகிறார்.

 

திருமணம் ஆன ராமகிருஷ்னனும், அமலா ரோஸும் தனியாக வசிக்க, உடல்நிலை சரியில்லாமல் போகும் சவுந்தரராஜாவை ராமகிருஷ்ணா தனது வீட்டில் தங்க வைக்கிறார். அப்போது வேலை விஷயமாக ராமகிருஷ்ணா வீடு திரும்ப நேரமாகிவிட, அந்த சூழ்நிலையில் எதிர்பாரதவிதமாக சவுந்தரராஜா அமலா ரோஸை தொட்டுவிடுகிறார். அதன் பிறகு அந்த தருணத்தை எண்ணி அவர் வேதனையோடு வாழ, தனது கணவரின் நண்பருக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்திவிட்டோமே என்ற வருத்தத்தோடு அமலா ரோஸூம் வாழ்கிறார்.

 

இந்த சம்பவத்திற்கு பிறகு ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு வருவதை சவுந்தரராஜ தவிர்த்து வர, தனது நண்பர் மீது எவரெஸ்ட்டை காட்டிலும் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கும் ராமகிருஷ்ணன், தனது வீட்டுக்கு வராததற்கான காரணத்தை சவுந்தரராஜாவிடம் கேட்க, அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் ‘ஒரு கனவு போல’ படத்தின் மீதிக்கதை.

 

இன்றைய சூழ்நிலையில், தினசரி பத்திரிகைகளில் எப்படி விளையாட்டு, சினிமா, அரசியல் போன்ற துறைகளைப் பற்றி செய்தி வருகிறதோ, அதுபோல தகாத உறவு முறைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தினமும் செய்தி வருகின்றன. அப்படி உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சூழ்நிலையும் ஒரு காரணமாக அமைந்தாலும், அவற்றில் இருந்து சுதாரித்துக் கொண்டு பிறருக்கு துரோகம் செய்யக் கூடாது, என்ற மெசஜை ரொம்ப நாசுக்காக சொல்லியிறார் இயக்குநர் விஜய்சங்கர்.

 

சவுந்தரராஜா மற்றும் ராமகிருஷ்ணன் இருவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒப்பனை இல்லாத இவர்கள், கதாபத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திருப்பதுடன் எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இருப்பது பெரும் ஆறுதல். நாயகி அமலா ரோஸ், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கணவரின் நட்பை புரிந்துக்கொண்டு நடக்கும் காட்சிகளிலும், நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை கணவரின் மனது நோகாமல் அவருக்கு புரிய வைக்கும் காட்சிகளிலும் தனது உணர்வை வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

 

ஈ.எஸ்.ராம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஏற்ப இருக்க, அழகப்பனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியுள்ளது.

 

மெசஜ் சொன்னாலே, அதை மக்களுக்கு புரியும் வகையில் சற்று பொருமையாக தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் விஜய்சங்கர் அமைத்திருக்கிறார்.

 

ஆட்டம், பாட்டம் என்று கமர்ஷியல் பட அம்சங்கள் இந்த படத்திலும் இருந்தாலும், அவற்றை அளவாக வைத்துவிட்டு, தான் சொல்ல வந்த விஷயம் மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வேண்டும் என்பதற்காக இயக்குநர் திரைக்கதையை கையாண்ட விதம் படத்திற்கு வேகத்தடையாக அமைந்தாலும், விபத்து நேராமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சம் தான் வேகத்தடை என்பதை முழுப்படமும் புரியவைத்து விடுகிறது.

 

சர்ச்சையான கருவாக இருந்தாலும், அதற்கு இயகுநர் திரைக்கதை அமைத்த விதமும், காட்சிகளை வடிவமைத்த விதமும் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தில் சோகத்தை பிழியும் அழுகாச்சி காட்சிகள் அதிகமாக இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான ஒரு மெசஜை ரொம்ப இயல்பாக சொல்லியிருப்பதோடு, யார் மனதையும் நோகடிக்காமல், யாரையும் குற்றவாளியாக்காமல் இயக்குநர் படத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

 

மொத்தத்தில், வித்தியாசமான திரைப்படங்களை ரசிக்கும் அனைத்து ரசிகர்களுக்கு ‘ஒரு கனவு போல’ பர்பெக்ட் படமாக இருக்கும்.

 

ஜெ.சுகுமார்