Latest News :

’கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம்

6c7ba5584d8addc2f69b3988c155378b.jpg

Casting : Bharath, Ruhani Sharma, Angana Roy

Directed By : Ravi Bhargavan

Music By : Anbu Rajesh

Produced By : John Sudheer Pudhota

திருமணத்திற்கு முன்பாக ‘உறவு’ வைத்து கொண்டால் தான், காதலையே ஏற்றுக்கொள்வேன் என்று காதலியிடம் கண்டிஷன் போடும் ஹீரோ.. காதலனின் ’அந்த’ கண்டிஷனை கேட்டு ஷாக்காகும்  காதலி… மற்றொரு பக்கம் ’உறவுக்கு’ வலுக்கட்டாயமாக’ அழைக்கும் இரண்டாவது ஹீரோயின்…இவர்கள் மூன்றுப்பேருக்கும் இடையிலான காதலுக்கு ’என்ன’ நடந்தது? திருமணத்திற்கு முன்பாகவே ’உடலுறவு’ வைத்து கொள்ளும் இன்றைய மாடர்ன் லவ் சரியானதுதானா  என்பதுதான் ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்தின் ஒரு வரிக்கதை.

 

 

கல்லூரி மாணவராக பரத். அப்பாவியாகவும், அடப்பாவி என்று சொல்ல வைக்கும் மாடர்ன் மாணவராகவும்  கவர்கிறார். கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் பஞ்சாப்பில் ‘மியூசிக் ஆல்பங்களில்’  கலர்ஃபுல்லாக கலக்கும் ரூஹானி ஷர்மா. இரண்டாவது கதாநாயகியாக, இன்றைய தலைமுறையை ஸ்கேன் எடுத்தது போல்  பரப்பரக்க வைக்கிறார் அங்கனா ராய். லவ் குருவாக ரவிமரியா சில இடங்களில் கலகலக்க வைக்கிறார்.

 

 

தமிழ் சினிமாவில் ஆல்டைம் ஃபேவரிட்டாக இருக்கும் காதலை தான் இயக்குநர் ரவி பார்கவன் கையிலெடுத்து இருக்கிறார். வழக்கமான கல்லூரி கலாட்டா, மோதல், மோகம், காதல் அம்சங்களோடு இன்றைய தலைமுறையினரில் பலரிடம் இருக்கும், ‘கலவியும் கற்றும் மற’ கான்செப்ட்டை நாகரீகமாக சொல்ல முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் ரவி பார்கவனுக்கு ஒரு பூங்கொத்து.

 

 

படத்தில் குறிப்பிடும்படியான அம்சம், யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ‘நச்’ வசனங்கள். “வயித்துக்குப் பசி எடுத்தா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுறது இல்லயா.. அதே மாதிரி உடம்புக்குப் பசி எடுத்தா இன்னொருத்தர் உடம்பு மூலம் அத  தீர்த்துக்குறது தப்பில்ல”, ”பசங்க நாம தப்பு பண்ணாட்டியும், பொண்ணுங்க தப்பு பண்ணாலும் சட்டம் அவங்க பக்கம்தான் ஸ்ட்ராங். அதனால நம்மள ஸ்ட்ராங்கா வைச்சுக்க, கல்யாணத்துக்கு முன்னாடியே ’கன்ஃபர்ம்’ பண்றதுல தப்பே இல்ல”, ”பப்புக்கு போறதுக்கும், பார்ட்டி பண்றதுக்கும் இவங்களுக்கு லவ்வர்ங்குற பேர்ல நாம தேவை. அப்புறம் டிஷ்யூ பேப்பர் மாதிரி தொடைச்சிட்டு தூசி வீசிடுவாங்க”, இப்படி படம் நெடுக இந்த தலைமுறையை  போட்டோ ஸ்கேன் எடுத்த மாதிரி வசனங்கள் படபடப்பை திரையரங்கில் பரவவிடுகிறது.

 

”30 இன்ச் டிவியா இருந்தாலும், 52 இன்ச் டிவியா இருந்தாலும், அதோட ரிமோட் கண்ட்ரோல் 5 இன்ச்தான்” என கல்லூரிப் பெண்கள் பசங்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட் ஐயோ ஐயோ….

படத்தின் முதல் பாதியில் ’இரட்டை அர்த்தமுள்ள காமெடியை ‘ இவ்வளவு அதிகம் எக்ஸ்போஸ் செய்திருக்கிறீர்களே ரவி பார்கவன் இது அவசியம்தானா?  

 

ஒளிப்பதிவு கதையின் ஓட்டத்தில் பயணிக்கிறது. ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் முஜீர். அடுத்து இசையமைப்பாளராக அன்பு ராஜேஷ் அறிமுகமாகி இருக்கிறார்.  பாடல்கள் மெலோடி ரகம். ஃபேஸ்புக் லவ்வுல கிக் இல்ல பாடல் ட்ரெண்ட்டியான குத்துப்பாட்டு. 

 

இயக்குநர் கையிலெடுத்து  கொண்டது என்னவோ வில்லங்கமான கான்செப்ட்தான். ஆனால் அதை வசனங்களால்  பேலன்ஸ் செய்து கொண்டே போவது ‘கடைசி பென்ச் கார்த்தியின்’ பலம். 

 

பரத்துடன், அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் கைக்கோர்த்திருந்தால், படத்தின் பிரதிபலிப்பு இன்னும் அருமையாக இருந்திருக்கும். முதல்பாதி பரபர கலாட்டாக்களால் படம் விறுவிறுவென நகர்கிறது. இரண்டாம் பாதி சீரியஸான கதை, ப்ளாஷ்பேக் என உசைன்  போல்ட் வாக்கிங் போனது போல முடிகிறது.

 

ஒரு நல்ல விஷயத்தை, கசாமுசா கான்செப்ட்டுடன் கொடுத்திருக்கிறார்கள்.