Latest News :

12.12.1950 விமர்சனம்

63832a3a12f02b1cea71070cad8835f9.jpg

Casting : Kabali Selva, Ramesh Thilak, aadgavan, Thambi Ramaiya, MS Baskar

Directed By : Kabali Selva

Music By : Adithyha - Soorya

Produced By : Jyo Star enterprises

 

குங் பூ மாஸ்டரான கபாலி செல்வா தீவிர ரஜினி ரசிகர். அவரிடம் குங் பூ கற்றுக் கொள்ளும் ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாத் கிருபாகரன் ஆகிய 4 நண்பர்களும் கபாலி செல்வாவை பார்த்து ரஜினி ரசிகர்களாகிறார்கள்.

 

இந்த நிலையில், கவுன்சிலர் ஒருவர் ரஜினி போஸ்டரை கிழிப்பதை பார்க்கும் கபாலி செல்வா, கோபப்பட அதனால் ஏற்படும் மோதலில் கவுன்சிலர் உயிரிழக்கிறார். கொலை குற்றவாளியாகும் கபாலி செல்வாவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. சில நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிறையில் இருக்கும் கபாலி செல்வா, அப்படத்தை பார்க்க ஆசைப்படுகிறார். தனது குருவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருக்கு பரோல் வாங்க 4 நண்பர்களும் முடிவு செய்கிறார்கள். அதே சமயம் கபாலி செல்வா வெளியில் வந்தால் அவரை கொலை செய்ய கவுன்சிலரின் தம்பி காத்துக் கொண்டிருக்கிறார். 

 

சினிமா பார்க்க பரோல் கேட்டால் கிடைக்காது என்பதை அறியும் 4 நண்பர்கள், தங்களது குருவை வெளியே எடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் தான் ‘12.12.1950’ படத்தின் மீதிக் கதை. 

 

ஒரு நடிகரின் தீவிர ரசிகர் என்றால், அவர் அந்த நடிகருக்காக என்னவெல்லாம் செய்வார், அதிலும் ரஜினி ரசிகர் என்னவெல்லாம் செய்வார், இயக்குநர் மற்றும் நடிகராக மட்டும் இன்றி, ரஜினி ரசிகராகவும் கபாலி செல்வா திரையில் சிறப்பாகவே காட்டியுள்ளார்.

 

4 நண்பர்களாக வரும் நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகளும், யோகி பாபுவின் காட்சியும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்துள்ளது.

 

ஆதித்யா - சூர்யாவின் இசையும், விஷ்ணு ஸ்ரீ.கே ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

கதையின் நாயகனான காபாலி செல்வா, தவிர்த்து படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் காமெடி நடிகர்கள் என்பதால் நகைச்சுவை சற்று தூக்கலாகவே இருக்கிறது. நடிகர்களின் படம் வெளியானால், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்களின் மனநிலையை காட்சிகளாக்கியுள்ள இயக்குநர் கபாலி செல்வா, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர் பற்றிய படமாக இப்படத்தை எடுத்திருப்பதால், பல காட்சிகள் மனதில் ஒட்டாமல் போகிறது. இருந்தாலும், காமெடிக் காட்சிகள் நிறைவாக இருப்பதால், தியேட்டரில் அவ்வபோது சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 

மொத்தத்தில், ரஜினியின் ‘கபாலி’ படத்தை வைத்து போடப்பட்ட காமெடி நாடகம் தான் இந்த ‘12.12.1950’.

 

ஜெ.சுகுமார்