Latest News :

’டபுள் டக்கர்’ திரைப்பட விமர்சனம்

99d08a98489ee72a8b7cc6aba45aca71.jpg

Casting : Dheeraj, Smurthi Venkat, Kovai Sarala, MS Bhaskar, Mansoor Alikhan, Yashika Anand, Karunakaran, Munishkanth, Kali Venkat

Directed By : Meera Mahadhi

Music By : Vidya Sagar

Produced By : Air flick

 

ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை, அவர் செய்யும் தீமைகள் மற்றும் நன்மைகளை கணக்கெடுத்து கடவுளிடம் ஒப்படைப்பதோடு, இறந்தவரின் உயிரையும் கடவுளிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு தேவதைகள் செய்து வருகிறார்கள். லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அந்த இரண்டு தேவதைகள், நாயகன்  தீரஜின் ஆயுள் முடிவதற்குள் தவறுதலாக அவரது உயிரை பரித்துவிடுகிறார்கள்.  இந்த விசயம் கடவுளுக்கு தெரிவதற்குள், தீரஜின் உடலில் அவரது உயிரை வைக்க முயற்சிக்கும் போது அவரது உடல் மாயமாகிவிட, அதனால் வரும் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை நகைச்சுவையாகவும், அனிமேஷன் மூலம் வித்தியாசமாகவும் சொல்வது தான் ‘டபுள் டக்கர்’.

 

ரஜினிகாந்தின் ‘அதிசய பிறவி’ படத்தின் அனிமேஷன் வெர்ஷன் போல் கதை பயணித்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் அனிமேஷன் யுக்தி மூலம் சிறுவர்களை கவர்ந்திழுக்க முயற்சித்திருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் தீரஜ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருமதி வெங்கட் மற்றும் கோவை சரளா, மன்சூர் அலிகான், யாஷிகா ஆனந்த், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், சுனில் ரெட்டி, ஷாரா என படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

 

கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கும் நாயகன் தீரஜ், காமெடி காட்சிகளில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருமதி வெங்கட் கமர்ஷியல் கதாநாயகியாக அவ்வபோது தலைகாட்டுகிறார்.

 

கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்த் ஒரு பக்கம், சுனில் ரெட்டி மற்றும் ஷாரா மறுபக்கம் காமெடி செய்ய, கூடுதலாக எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்ட்டியும், அவ்வபோது மன்சூர் அலிகான் மற்றும் கோவை சரளாவும் கோதாவில் இறங்கி அசரடிக்க முயற்சித்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய காமெடி நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் சிரிப்பு சத்தம் என்னவோ குறைவாக தான் கேட்கிறது.

 

லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஷ்காந்த், முகத்தை காட்டாமலேயே சிரிக்க வைப்பதோடு, அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

 

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வலம் வரும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களின் வடிவவைப்பும், அந்த கதாபாத்திரங்கள் தங்களது உணர்வுகளை சினிமா கதாபாத்திரங்களாக மாறி வெளிப்படுத்தும் விதமும், புதிதாக இருப்பதோடு, பார்வையாளர்களை மெய்மறந்து சிரிக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரனின் கேமரா, கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, அனிமேஷன் கதாபாத்திரங்களை, நட்சத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்திருப்பதை நேர்த்தியாக செய்திருக்கிறது.

 

வித்யா சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

 

அறிமுக இயக்குநர் மீரா மஹதி, கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அனிமேஷன் கதாபாத்திரங்களையும், நடிகர்களையும் இணைத்து வடிவமைக்கப்பட்ட காட்சிகளுக்காக படக்குழு அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

முதல் பாதி முழுவதும் லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களை வைத்து சிரிக்க வைக்கும் இயக்குநர் மீரா மஹதியின் எழுத்தில் நகைச்சுவை ததும்பினாலும் அதை நட்சத்திரங்கள் மூலமாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில்  சற்று தடுமாறியிருக்கிறார். 

 

அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களை திரைக்கதையில் சரியான முறையில் பயன்படுத்தி, அவர்கள் மூலம் பல திருப்பங்களை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் மீரா மஹதி, அனிமேஷன் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தது போல், நடிகர்கள் மூலமாகவும் ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தால் படத்தின் தலைப்பை போலவே படமும் இரட்டிப்பு வெற்றியை பெற்றிருக்கும்.

 

மொத்தத்தில், இந்த ‘டபுள் டக்கர்’ சிறுவர்களை கொண்டாட வைக்கும்.

 

ரேட்டிங் 2.8/5