Latest News :

‘பாகுமதி’ விமர்சனம்

2dfb7798fd9bea96984d2911180a99dd.jpg

Casting : Anushka, Asha Sharath

Directed By : G.Ashok

Music By : S.Thaman

Produced By : V. Vamsi Krishna Reddy Pramod

 

'பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதே சாயலில் அனுஷ்கா நடித்திருக்கும் இந்த ‘பாகுமதி’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

மத்திய அமைச்சரான ஜெயராமிடம் 10 வருடங்களாக பர்சனல் செக்ரட்டரியாக பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனுஷ்கா, தனது காதலனை சுட்டுக் கொன்றுவிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, நேர்மையான அரசியல்வாதியான ஜெயராமின் மீது ஊழல் பழியை சுமத்தி, அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யும் முதலமைச்சர், சிபிஐ மூலம் சிலை கடத்தல் குற்றத்தை ஜெயராமின் மீது போட முடிவு செய்கிறார்.

 

மக்களிடம் செல்வாக்கு மிக்க நேரமையான அரசியல்வாதியான ஜெயராமை இந்த வழக்கில் நேரடியாக குற்றம் சாட்ட முடியாது என்பதால், சிறையில் இருக்கும் அவரது முன்னாள் பர்ஸ்னல் செக்ரட்டரி அனுஷ்காவிடம் விசாரணை நடத்தி, அதன் மூலம் ஜெயராமை கைது செய்ய முயற்சிக்கும் சிபிஐ, யாருக்கும் தெரியாமல் இந்த வேலையை செய்ய முடிவு செய்கிறது. அதற்காக சிறையில் இருக்கும் அனுஷ்காவை, காட்டில் இருக்கும் பாகுமதி பங்களாவில் வைத்து விசாரிக்கவும் முடிவு செய்கிறார்கள்.

 

பாகுமதி என்ற ராணியின் ஆவி அந்த கோட்டைக்குள் இருப்பதாகவும், அதற்குள் நுழைந்தவர்கள் உயிரோடு வந்ததில்லை, என்ற கதையை மக்கள் சொன்னாலும், சிபிஐ அனுஷ்காவை அந்த கோட்டைக்குள் குடி வைத்து விசாரிக்கும் பணியை தொடங்குகிறது. 

 

எப்படியாவது ஜெயராமை குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அனுஷ்காவிடம் சிபிஐ அதிகாரி கிடுக்குபிடி விசாரணையை மேற்கொள்ள, எதற்கும் அசரமால் விசாரணையை எதிர்க்கொண்டு வரும் அனுஷ்கா, திடீரென்று பாகுமதி அவதாரம் எடுத்துவிடுகிறார்.

 

 தன்னை பாகுமதி ராணி என்று கூறிக்கொண்டு, காவலர்களை கதறவிடும் அனுஷ்காவிடம் ஜெயராம் குறித்து விசாரிக்காமல், பாகுமதி குறித்து விசாரிக்கும் சிபிஐ அதிகாரி, ஒரு கட்டத்தில் அதை உண்மை என்று நம்பி விசாரணையை முடித்துக்கொள்வதோடு, அனுஷ்காவை மனநல மருத்துவமனையில் அனுமதித்துவிடுகின்றனர். 

 

மருத்துவமனையில் இருக்கும் அனுஷ்காவை சந்திக்கச் செல்லும் ஜெயராம், தன்னுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு அனுஷ்காவிடம், “ரொம்ப நல்லா நடிச்சு என்ன காப்பாத்திட்ட” என்று கூற, அனுஷ்காவும் அவரது தோள்மீது சாய்கிறார். ”என்னடா நடக்குது இங்கே”, என்று ரசிகர்கள் யோசிப்பதற்கு முன்பே, அனுஷ்கா எதற்காக காதலரை கொலை செய்தார்?, ஜெயராமுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் போது, பாகுமதி குறித்த ரகசியமும், அதன் பின்னாள் இருக்கும் அனுஷ்காவை பற்றியும் சொல்லப்படும் ட்விஸ்ட் தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

பேய் கோட்டைக்குள் அனுஷ்கா எண்ட்ரியானவுடனே தெரிந்துவிடுகிறது, அவர் தான் பாகுமதி என்று, ஆனால் அந்த பாகுமதி யார்? அவரது பின்னணி என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், தொடர்ந்து வரும் காட்சிகள் ரசிகர்களின் பொருமையை சோதித்து அவர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.

 

இரவு நேரத்தில் பாகுமதி கோட்டைக்குள் அனுஷ்கா சுற்றி வருவதையே முதல் பாதி முழுவதும் காட்டும் இயக்குநர், இடைவேளைக்கு பிறகு பாகுமதி யார்? என்பதை ஒரே ஒரு காட்சி மூலம் சொல்லி முடித்துவிடுவது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துவிடுகிறது. 

 

ஊழல் அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட நேர்மையானவர்கள் அந்த அரசியல்வாதியின் முகத்திரையை கிழிக்கும், சாதாரண கமர்ஷியல் பார்முலா தான் படத்தின் கதை என்றாலும், அதற்கு பாகுமதி என்ற வரலாற்று ஆபரணத்தை மாட்டிவிட்டு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

 

பாகுபலியில் ராணியாக வந்து மிரட்டிய அனுஷ்கா, பாகுமதி என்ற ஆவியாக மிரட்டுவதோடு, ஆவிக்கு பயப்படும் காட்சிகளிலும், தன்னை பாகுமதியாக காட்டிக்கொள்ளும் காட்சிகளிலும் நடிப்பில் அப்ளாஷ் வாங்குகிறார். ஆனால், ஐஏஎஸ் அதிகாரியாக வரும்போது மட்டும் தனது குண்டான தோற்றத்தைக் காட்டி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.

 

சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷா சரத்தின் கம்பீரமான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மத்திய அமைச்சர் வேடத்தில் ரொம்ப அமைதியாக நடித்திருக்கும் ஜெயராம், க்ளைமாக்ஸில் எடுக்கும் அவதாரம், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒன்றாக இருந்தாலும், அவர் அதில் செய்திருக்கும் பர்பாமன்ஸ் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

அனுஷ்காவின் காதலர் மற்றும் அவரது அண்ணனாக நடித்திருப்பவர் என்று படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், மொத்த படமும் பாகுமதி என்ற அனுஷ்காவை சுற்றியே சுழல்கிறது. இருந்தாலும், அந்த பாகுமதி என்ற வேடத்தை பங்களாவுக்குள்ளேயே பூட்டி வைத்துவிடும் இயக்குநர் ஜி.அசோக், திரைக்கதையை வேறு திசையில் திருப்புவதால், மொத்த படமும் முடங்கி விடுகிறது.

 

படத்தில் பாராட்டுக்குரிய விஷயம் என்றால், அனுஷ்காவின், பாகுமதி கோட்டையின் கலைப் பணி, தமனின் பின்னணி இசை மற்றும் ஆர்.மதியின் ஒளிப்பதிவு.

 

பாகுமதி, என்ற ஆவியின் மூலம் நம்மை மிரட்டுவதற்கு பதிலாக அவரை வைத்து பூச்சாண்டி வித்தையை காட்டியிருக்கிறார்கள்.

 

ஜெ.சுகுமார்