Oct 20, 2017 11:30 AM

விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

பல சோதனைகளை கடந்து தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை கொண்டிருப்பதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்தும் விளாசியிருக்கிறது.

 

குறிப்பாக டிஜிட்டல் மணி, ஜிஎஸ்டி போன்றவற்றுக்கு எதிராக விஜய் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் கைதட்டல் அள்ளுகிறது. 

 

இதற்கிடையே, ஜிஎஸ்டி, டிஜிட்டல் மணி-க்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க-வினர், அந்த வசனங்களை இரண்டு நாட்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில், படத்தை திரையரங்குகளில் ஓடவிட மாட்டோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அந்த காட்சிகளை நீக்கும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தின் காட்சிகள் நீக்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை. இது மக்களின் கருத்துத் தான். மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். அந்தக் காட்சிகளை எல்லோரும் ரசித்துப் பார்க்கிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்வா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளது. அவற்றைக் களைய வேண்டும் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

ரஜினியை வைத்து தான் இயக்கி வரும் ‘காலா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும், என்று கூறிய ரஞ்சித், நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார்.