Nov 02, 2017 02:18 PM

காவல் துறைக்கு கெளரவம் சேர்க்கும் படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இருக்கும் - கார்த்தி!

காவல் துறைக்கு கெளரவம் சேர்க்கும் படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இருக்கும் - கார்த்தி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் வினோத், நாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிபரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ”தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் படமாக இருக்காது. முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். 

 

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை சிறுத்தை படத்திற்காக சில போலீஸ் அதிகாரிகளை சொல்லிய போது அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதுவே சில ஆண்டுகளில் கதையாக, அதுவும் என்னிடமே வந்த போது, அதில் ஏதோ இருக்கிறது என்று புரிந்துக்கொண்டேன்.

 

இந்த படத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறோம். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். படம் முழுவதும் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும்படி சிறப்பாக வந்துள்ளது. என்ன தான் ஆக்‌ஷம் இருந்தாலும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருந்தாலும், இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் தான். அதையும் நேர்மையாக கையாண்டுள்ள இயக்குநர் வினோத், படத்தில் சிறு மெசஜும் சொல்லியிருக்கிறார்.

 

ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் , காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன். இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.” என்றார்.

 

இயக்குநர் வினோத் பேசுகையில், “போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள்  தான்.  அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில் , அரசியலில் , பத்திரிக்கையாளர்களில்  நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்த படத்திலும் இருப்பார்கள். தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார்.” என்றார்.