Nov 22, 2017 08:39 AM

அசோக்குமார் மரணம் தற்கொலை அல்ல, கொலை - விஷால் ஆவேசம்!

அசோக்குமார் மரணம் தற்கொலை அல்ல, கொலை - விஷால் ஆவேசம்!

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசீக்குமாரின் தற்கொலை தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அசோக்குமார் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், ஆவேசத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.  இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.

 

எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும். 

 

பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு. 

 

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல, கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ,  நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.