Aug 14, 2017 06:58 AM

20 வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி - இயக்குநர்களின் ‘தொண்டன்’ ஆன நடிகர் முருகவேல்

20 வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி - இயக்குநர்களின் ‘தொண்டன்’ ஆன நடிகர் முருகவேல்

பல ஆண்டுகள் சினிமாவில் பலவிதமான கஷ்ட்டங்களை சந்தித்தாலும், உண்மையாக சினிமாவை நேசிப்பவர்களை சினிமா என்றுமே கைவிடாது என்பார்கள். அப்படி சுமார் 20 வருடங்களாக நடிகராக வேண்டும் என்ற முயற்சியில் பலவித போராட்டங்களை சந்தித்து, ‘தொண்டன்’ படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்று முழு நடிகராகியிருக்கிறார் முருகவேல்.

 

இந்த ஆண்டு வெற்றி பெற்ற தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான படம் சமுத்திரக்கனி இயக்கி நடித்த ’தொண்டன்’. அப்படத்தில் வில்லன் நமோ நாராயணன் கூடவே இருந்துக் கொண்டு, இறுதியில் அவரது எதிரணியில் சேர்ந்து அவருக்கே வில்லனாகும் கதாபாத்திரத்தில் நடித்த முருகவேலின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது போல, அவரது நடிப்பு இயக்குநர் சமுத்திரக்கனியை மட்டும் இன்றி, கோடம்பாக்கத்து முன்னணி இயக்குநர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

 

‘சண்டைக்கோழி’, ‘திமிரு’, ‘பருத்திவீரன்’, ‘ஆரண்யகாண்டம்’, ‘குக்கூ’ உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த முருகவேல், நல்ல நடிகராக வேண்டும் என்று கடந்த 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இப்படி நடிகராக வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் எந்த மாதிரியான இன்னல்களை சந்திப்பார்களோ அதைவிடவும் அதிகமான போராட்டங்களை சந்தித்து வந்தாலும், நல்ல நடிகராக வேண்டும் என்ற அவரது லட்சியத்தை ‘தொண்டன்’ படம் நிறைவேற்றியிருக்கிறது.

 

‘தொண்டன்’ படத்திற்குப் பிறகு ‘தொண்டன்’ முருகவேல் என்று அழைக்கப்படும் இவர், அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கள்ளன்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஹீரோவுடனே பயணிக்கும் வேடமாக இருப்பதோடு, ஹீரோவுக்கு யோசனை சொல்லும் முக்கியமான வேடம் என்பதால், ‘கள்ளன்’ படம் எனது சினிமா வாழ்வில் மேலும் ஒரு திருப்புமுனையாக அமையும், என்று நம்பிக்கையோடு கூறும் ‘தொண்டன்’ முருகவேலுக்கு அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்திலும் முக்கிய வேடம் கிடைத்திருக்கிறது.

 

அமீர் படம் மட்டுமல்ல, கார்த்தி நடிக்கும் ‘தீரன் அத்தியாயம் ஒன்று’, ’கலியுகம்’, ’உத்ரா’, இன்னும் தலைப்பு வைக்காத ஒரு படம், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படம் என்று தற்போது 20 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் ‘தொண்டன்’ முருகவேலுக்கு வாய்ப்புகள் பல வந்தாலும், நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறாராம். படம் முழுவதும் வர வேண்டும், இப்படிப்பட்ட கதாபாத்திரம் வேண்டும், என்றெல்லாம் நான் கேட்கவில்லை, நான்கு காட்சிகளாக இருந்தாலும், எனது கதாபாத்திரம் நஞ்சுனு இருக்கனும், அவ்வளவு தான், என்று தனது விருப்பத்தை தெரிவித்தவர், வில்லன், குணச்சித்திர வேடம் மட்டுமல்ல, நகைச்சுவை வேடங்களிலும் நடிக்க ரெடி என்கிறார்.

 

சிலம்பம் உள்ளிட்ட வீரவிளையாட்டுக்களை நன்று கற்று தேர்ந்தவரான முருகவேல், நடிப்பு மட்டும் இன்றி சண்டைக்காட்சிகளில் நடிப்பதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார். அதன் காரணமாக நடிப்பதோடு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலும், இயக்குநர்களுக்கு முருகவேல் நினைவுக்கு வருகிறாராம். 

 

மலைவாழ் மக்களை மையமாக உருவாகியுள்ள ‘உத்ரா’ படத்தில் 24 மணி நேரமும் மது போதையிலேயே இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து படம் முழுவதும் காமெடியில் கலக்கியிருக்கும் முருகவேல், இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஒரு படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்திலும், ‘கலியுகம்’ படத்தில் சென்னை தாதா வேடத்திலும், கார்த்தியின் ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ படத்தில் தூத்துக்குடி ரவுடி என்று படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர், எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும், இயக்குநர்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு அந்த கதாபாத்திரத்தில் ஒட்டிக்கொள்வதால், ’தொண்டன்’ முருகவேல் இயக்குநர்களின் நடிகராகியுள்ளார்.