May 26, 2018 11:29 AM

வடிவேலுக்கு வந்த சிக்கல்! - நடிப்புக்கு காத்திருக்கும் தடை

வடிவேலுக்கு வந்த சிக்கல்! - நடிப்புக்கு காத்திருக்கும் தடை

வைகை புயல் என்ற பட்டத்திற்கு ஏற்ப தனது காமெடியால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட வடிவேலு புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால், அவர் நடிக்கவே தடை போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

 

இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

 

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

 

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.

 

இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.