Aug 22, 2017 03:02 PM

இந்திய சினிமாவில் புதிய சாதனை நிகழ்த்திய ‘வெங்காயம்' இயக்குநர்

இந்திய சினிமாவில் புதிய சாதனை நிகழ்த்திய ‘வெங்காயம்' இயக்குநர்

சினிமா மரபுகளை தாண்டி, முழுக்க முழுக்க கிராமத்து மக்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படம் ‘வெங்காயம்’. போலிச்சாமியர்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

 

இதற்கிடையே, ‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராச்குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக தனி ஒருவராக ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். ஒற்றை மனிதரால் யாருடைய உதவியையும் சிறிதும் பயன்படுத்தாமல், தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு “முடியும்” என்று பதிலளிக்காமல், அதை நிரூபித்துக் காட்டும் வகையில், தனி ஒருவராக கதை எழுதிவதில் தொடங்கி, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், மேக்கப், எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ், இசை உள்ளிட்ட ஒரு திரைப்படம் உருவாக தேவையான அனைத்து துறை வேலைகளையும் தனி ஒருவராகவே செய்து சங்ககிரி ராச்குமார் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு ‘ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

ராச்குமாரின் இத்தகைய சாதனை முயற்சியை வெறும் எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, அவர் இப்படத்திற்காக தனி ஒருவராக வேலை செய்ததை, தொடக்கம் முதல் இறுதி வரை மற்றொரு கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறாராம்.

 

ஒரே நபரால் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், இப்படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராச்குமாரே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறார். வயதான தோற்றம் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை மோசன் கேப்சர் முறையில் செய்திருப்பவர், இதற்காக ஒக்கேனக்கல், தலக்கோணம் போன்ற அடர்ந்த காட்டு பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிப்பிரதேசங்களிலும் தனியாக தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளார். 

 

3 ஆண்டுகளில் இப்படத்தை முடிக்க திட்டமிட்ட ராச்குமார், தனியாக அனைத்து வேலைகளையும் செய்ததால், ஏற்பட்ட சில சிக்கல்களால் 4 ஆண்டுகளில் இப்படத்தை முடித்துள்ளவர், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அமெரிக்காவில் படமாக்கியுள்ளார்.

 

இப்படி தனி ஒருவரால் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஒன்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள சங்ககிரி ராச்குமார், ‘வெங்காயம்’ படத்தின் மூலம் தமிழக அளவில் பல இண்டிபெண்டண்ட் இயக்குநர்கள் உருவாக தூண்டுதலாக இருந்தது போல, இந்த ‘ஒன்’ படம் மூலம் இந்திய அளவில் முத்தாரனமாக இருப்பார் என்பது நிச்சயம்.

 

‘வெங்காயம்’ படத்தின் மூலம் மக்களை ஏமாற்றும் சாமியார்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, இந்த ‘ஒன்’ படத்திலும் மக்களுக்கு தேவையான முக்கியமான ஒரு செய்தியை சொல்லியிருக்கும் சங்ககிரி ராச்குமார், வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட் படங்கள் மக்களை எளிமையாக சென்றடைகிறது. அந்த வகையில், நான்கு ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பிறகு, பெரும் நிறைவாக உருவாகியுள்ள இப்படமும் மக்களை வெகுவாக சென்றடையும், என்று தெரிவித்தார்.