Sep 05, 2017 02:20 PM

50 வது நாளை நோக்கி ‘பாக்கணும் போல இருக்கு’ - உற்சாகத்தில் துவார் ஜி.சந்திரசேகர்!

50 வது நாளை நோக்கி ‘பாக்கணும் போல இருக்கு’ - உற்சாகத்தில் துவார் ஜி.சந்திரசேகர்!

‘வீரசேகரன்’ படத்தின் மூலம் அமலா பாலை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், தொடர்ந்து தனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘தொட்டால் தொடரும்’, ’இருவர் உள்ளம்’, ‘பாக்கணும் போல இருக்கு’ என ஐந்து படங்களை தயாரித்துள்ளார்.

ஐந்தாவது படமான ‘பாக்கணும் போல இருக்கு’ கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியாகி, தற்போது 50 வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகரை பெரும் உற்சாகமடைய செய்துள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பாக, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் தமிழகம் மட்டும் இன்றி, தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் ஹிட்டானது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது. அதிலும், “உன் ரெட்ட சடை கூப்பிடுது முத்தம்மா..” பாடல் கடல் கடந்து வெளிநாட்டு தமிழர்களிடம் பெரும் பிரபலமாகிவிட்டது.

பரதன் ஹீரோவாகவும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படத்தில் கஞ்சா கருப்பு, சூரி, பிளாக் பாண்டி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரி - கஞ்சா கருப்பு கூட்டணியின் காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாரின் நகைச்சுவைக் காட்சிகளும், இசையமைப்பாளர் அருள்தேவின் ஹிட் பாடல்களும், இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.

தற்போதும் தென் தமிழகம் முழுவதும் சுமார் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாக்கணும் போல இருக்கு’ வரும் வெள்ளிக்கிழமை தனது 50 வது நாளை நிறைவு செய்கிறது. 50 நாட்களை நெருங்கினாலும், இப்படத்தின் காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் கனிசமான எண்ணிக்கையில் இருப்பதால், படத்தை தொடர்ந்து ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டும் இன்றி சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இத்தகைய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்கள் ஒன்று இரண்டு வாரங்கள் தாண்டுவதே பெரும் சிரமமாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் அறிமுக ஹீரோ ஒருவர் நடித்த படம் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது, படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகருக்கு மகிழ்ச்சியுடன், நல்ல படம் எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும், என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. 

இதை தொடர்ந்து, தனது 6 வது படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க உள்ள  துவார் ஜி.சந்திரசேகர், அப்படம் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.