Sep 06, 2017 02:11 PM

கமல் அரசியலுக்கு வந்தால் படித்தவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் - எஸ்.வி.சேகர்

கமல் அரசியலுக்கு வந்தால் படித்தவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் - எஸ்.வி.சேகர்

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மறைமுகமாக அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், தற்போது பொது நிகழ்ச்சிகளில் நேரடியாக அரசியல் பேச தொடங்கியுள்ளார்.

 

கமல்ஹாசனின் இத்தகைய நடவடிக்கையால் அவர் விரைவில் அரசியலில் இறங்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர், கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று சந்தித்தார். கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திய எஸ்.வி.சேகர் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தார்.

 

கமல்ஹாசனை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்கள். அதனால் அவரை இன்று சந்தித்தேன். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். எனவே அவர் அரசியலுக்கு வர வேண்டும். கட்சி தொடங்க வேண்டும் என்று கூறினேன்.

 

கமல் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை. மூப்பனார் அரசியல் கட்சி தொடங்கிய போது படித்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் கமல் கட்சி தொடங்கினால் படித்தவர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கும்.

 

மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். எனக்கும் கமலுக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு. எனவே, அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்.

 

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.