Sep 08, 2017 07:34 PM

ஜாதி விவகாரம் - இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே மோதல்!

ஜாதி விவகாரம் - இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே மோதல்!

சென்னையில் இன்று நடைபெற்ற மாணவி அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில், ஜாதி தொடர்பான விஷயத்தில் இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துக் கொண்ட அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது கண்டத்தை பதிவு செய்து வருவதோடு ஆங்காங்கே போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

 

இன்று சென்னை வடபழனியில் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் அமீர் மற்றும் பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

 

முதலில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக் கூடியிருக்கிறோம். ஜாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாம் தமிழனாகச் சமத்துவம் அடைந்துள்ளோம்” என்றார்.

 

அமீரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், “இன்னும் எத்தனை நாள் சமூக நீதியற்ற சமூகமாக இருக்கப் போகிறோம்? தமிழனாக இருந்து நால் சொல்கிறேன் - தமிழ்த் தேசியம் எட்டாக்கனிதான். ஜாதியாகப் பிரிந்திருக்கும் வரை உன்னால் தமிழ்த் தேசியத்தைத் தொடமுடியாது.

 

தமிழ், தமிழன் என்று இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு தெருவிலும் ஜாதி உள்ளது. தமிழன் ஜாதியால் பிரிந்துள்ளான். ஒப்புக்கொள்ளுங்கள். அனிதாவின் மரணத்திலாவது நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என்று ஆவேசமாக பேசியதால், அரங்கத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.