Sep 10, 2017 08:43 AM

விஜயின் ‘துப்பாக்கி’ ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டேன் - மகேஷ் பாபு!

விஜயின் ‘துப்பாக்கி’ ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டேன் - மகேஷ் பாபு!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் மகேஷ் பாபு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்க, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மதன் கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

 

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று இரவு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மகேஷ் பாபு பங்கேற்ற இவ்விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துக் கொண்டார்கள். தெலுங்கு நடிகர் ஒருவருக்கு சென்னையில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டமா! என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, “திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்களாக முயற்சித்து வருகிறோம். அது இது போல ஒரு பிரமாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது. 120 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை தயாரிக்க எங்கள் தயாரிப்பளர்கள் முன் வந்தது மிகப்பெரிய விஷயம். இரு மொழிகளில் வெளியானால் தான் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். அதனால் தான் தமிழிலும் படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரீஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ் ஜே சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார். 

 

எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனாலும் துப்பாக்கி படத்தை பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.” என்றார்.

 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, “10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் ஒக்கடு படத்தை பார்த்தேன், ரிலீஸ் ஆகி 3 வாரம் ஆன படத்தை கூட ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் போக்கிரி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் துப்பாக்கி படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன். மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். மகேஷ்பாபு எனக்கும், உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர் கானுக்கு அப்புறம், படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்கணும்னா சொல்லுங்க, தேதி ஒதுக்கி தருகிறேன் என சொன்ன ஹீரோன்னா அது மகேஷ்பாபு தான். இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும். 

 

ஹாரீஸ் ஜெயராஜ் திரைக்கதை தெரிஞ்ச ஒரு இசையமைப்பாளர். இந்த படத்தின் பின்னணி இசை மிரட்டும். ஹீரோவாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த எஸ்ஜே சூர்யா, இதில் வில்லனாக நடிக்க கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி நடிக்க ஓகே சொன்னார். இந்த படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் 2000 பேர் நடிச்சிருக்காங்க. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு அதை வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன். மகேஷ்பாபு நானே பயப்படும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். கலைக்கு மொழி, எல்லை கிடையாது. சமீபத்திய உதாரணம் சீனாவில் 1000 கோடி வசூல் செய்த டங்கல். இப்போ புதுசு புதுசா வர ஹீரோக்கள் கூட ரெண்டே படங்கள்ல ஏதேதோ பட்டத்தை போட்டுகிறாங்க. ஆனால் மகேஷ்பாபுவுக்கு பட்டம் போட்டுக்கிறதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று முகம் படத்தில் மகேஷ்பாபு நடித்தால் சிறப்பாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.