Sep 13, 2017 06:50 AM

முடிவுக்கு வந்தது பெப்ஸி வேலை நிறுத்தம் - படப்பிடிப்புகள் தொடக்கம்

முடிவுக்கு வந்தது பெப்ஸி வேலை நிறுத்தம் - படப்பிடிப்புகள் தொடக்கம்

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்ஸி) தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இன்று அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்கியது.

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்ஸி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் பெப்ஸி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனால், ரஜினிகாந்தின் ‘காலா’, விஜயின் ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது. அதேபோல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி கஷ்ட்டப்பட்டனர்.

 

இதையடுத்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலைஞர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வலியுறுத்தியதால், தயாரிப்பாலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெப்ஸி அல்லாதவர்கள், சினிமாத்துறை சம்மந்தமான பணியில் பயிற்சி பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் பணிபுரியலாம், என்று தயாரிப்பாளர்கள் சங்கம் விளம்பரம் கொடுத்தது. இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்த பெப்ஸி அமைப்பு, இது பெப்ஸி தொழிலாளர்களை அழிப்பதற்கான வேலை, என்று குற்றம் சாட்டியதோடு வேலை நிறுத்தத்தையும் அறிவித்தது. மேலும், சென்னையில் பெப்ஸி தொழிலாளர்கள் கண்டனம் ஆர்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.

 

இதையடுத்து மீண்டும் தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்ஸி இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் பெப்ஸி தொழிலாளர்கள் நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டம் கைவிடப்பட்டது. ஆனால், வேலை நிறுத்தம் மட்டும் தொடர்ந்தது. இதனால் விஷாலின் ‘சண்டைக்கோழி 2’, ரஜினியின் ‘காலா’ உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி இடையே நேற்று (செப்.12) நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், பெப்ஸி அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இன்று முதல் வழக்கம் போல படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது.