Sep 17, 2017 06:05 AM

நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மத்திய அரசு சார்பில் ‘தூய்மையே சேவை’ இயக்கம் நேற்று முன் தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கம் மூலம் மகாத்மா காந்தி பிறந்தநாளான வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தூர்மையை பேணவேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து பிரதமர் மோடி, நடிகர் மோகன்லாலுக்கு எழுதிய கடிதத்தை கேரள மாநில பா.ஜ.க நேற்று வெளியிட்டது. அந்த கடிதத்தில், “தூய்மையான இந்தியா என்பது ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் நாம் செய்யும் புனித சேவை ஆகும். இதில் திரைப்படத் துறையில் பிரபலமாக இருப்பவர்களால் நிச்சயம் சாதகமான நிலைமையை உருவாக்கும் சக்தி இருக்கிறது.

 

எனவே தூய்மையே சேவை இயக்கத்திற்கு தங்களது ஆதரவை நாடுகிறேன். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் நீங்களும் கலந்துகொள்வதை விரும்புகிறேன். இதேபோல் தூய்மை இந்தியா திட்டத்திற்கும் நீங்கள் சிறிது காலத்தை அர்ப்பணித்திட வேண்டுகிறேன்.

 

தூய்மையே சேவை இயக்கத்தில் நீங்கள் பங்கேற்பதன் மூலம் பல லட்சம் மக்களை இதில் இணைத்திடுவதற்கு உதவியாக அமைந்திடும்.

 

இந்த இயக்கம் குறித்து உங்களுடைய அனுபவங்களை ‘நரேந்திர மோடி மொபைல் ஆப்’பிலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

 

தேச தந்தை மகாத்மா காந்தி தூய்மையான இந்தியா குறித்து கனவு கண்டார். அவருடைய உயர்வான சிந்தனைகளையும், 125 கோடி இந்திய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உணர்வின் அடிப்படையிலும் தூய்மையை பேணுவது குறித்த நமது உறுதிமொழியை புதுப்பிப்போம்.

 

காந்தி பிறந்தநாள் வரை இதற்காக நாம் முழு அளவில் ஆதரவு அளிப்போம். நாடு முழுவதும் தூய்மையை பேணுவது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்போம். அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டை தூய்மையாக உருவாக்குவதுதான் மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும். இதன் மூலம் புதிய இந்தியாவையும் கட்டமைப்போம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.