Sep 19, 2017 11:44 AM

கமல், ரஜினி அரசியல் பிரவேசம் - வெளுத்து வாங்கிய சிங்கமுத்து!

கமல், ரஜினி அரசியல் பிரவேசம் - வெளுத்து வாங்கிய சிங்கமுத்து!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து பலர் பல்வேறூ கருத்துக்களை கூறி வரும் நிலையில், காமெடி நடிகரும், அதிமுக பிரமுகருமான சிங்கமுத்து, ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று கூறியதோடு அவர்களது அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இது குறித்து ஈரோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சிங்கமுத்து, “நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க-வை தொடர்ந்து குறை கூறிவருகிறார். இவர் பேசுவதில் அண்ணன் விஜயகாந்தை போன்றவர். காரணம் இரண்டு பேர் பேசுவதும் யாருக்குமே புரியாது.

 

கமல் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் பணியாற்றும் இந்த அரசைக் குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுங்கள். அப்புறம் அரசியல் பணியாற்றலாம்

 

ஜனநாயக நாட்டில் மக்கள் ஓட்டுப் போட்டால் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வை தவிர மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாட்டுக்கு தேவையா?

 

ரஜினிகாந்த் இளம் வயதில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் போது நடிக்கப் போய்விட்டார். இப்போது வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த பலனும் இல்லை.

 

இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இதுவரை எவ்வளவு பணத்தை மக்களுக்காகச் செலவு செய்தீர்கள்?

 

நீங்கள் நடியுங்கள், சம்பாதியுங்கள். ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படாதீர்கள். இல்லை என்றால் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள். நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.