Sep 22, 2017 07:14 AM

ஹீரோக்கள் சினிமா தியேட்டர்களை கட்ட வேண்டும் - தயாரிப்பாளரின் அதிரடி பேச்சு!

ஹீரோக்கள் சினிமா தியேட்டர்களை கட்ட வேண்டும் - தயாரிப்பாளரின் அதிரடி பேச்சு!

தி பட்ஜெட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில், செந்தில் செல்.அம், தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘திரு.வி.க.பூங்கா’. இப்படத்தின் திரைப்பட முன்னோட்ட அறிமுக விழா நேற்று மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், “இந்த படத்தை இயக்கிய செந்தில் செல்.அம் கடலூரைச் சேர்ந்தவர். நானும் கடலூரைச் சேர்ந்தவன் என்பதால், அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டேன்.

 

இன்று ஒரு திரைப்படம் எடுப்பது ரொம்ப எளிதானது. ஆனால், அதை தியேட்டருக்கு கொண்டு வருவது என்பது ரொம்பவே கஷ்ட்டம். நான் தயாரித்த முதல் படமான ‘மைனா’ வும் அதுபோன்ற கஷ்ட்டங்களை சந்தித்தது. 6 பேருக்கு படத்தை போட்டு காட்டியும், யாரும் வாங்கவில்லை. ஏழாவதாக உதயநிதிக்கு போட்டு காட்டினோம். அவர் இந்த படத்தை வாங்கி வெளியிட்டதால் தான் படம் பெரிய வெற்றி பெற்றது. உதயநிதி சார், படத்திற்கு செய்த பப்ளிசிட்டியால் தான் மைனா என்ற படம் மக்களை சென்றடைந்தது, இல்லை என்றால் அந்த படம் காணாமல் போயிருக்கும்.

 

இப்படித்தான் பல நல்ல படங்கள் வெற்றி பெறாமல், மக்களை சென்றடையாமல் போயிருக்கிறது. அதற்கு குறைந்த அளவில் தியேட்டர்கள் இருப்பதும் ஒரு காரணம். சென்னை போன்ற பெருநகரங்களில் நல்ல படமோ, நல்லா இல்லாத படமோ, 75 சதவீதம் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால், தியேட்டர்கள் சரியில்லை என்றால் யாரும் வருவதில்லை. கோடி கோடியாய் பணத்தை போட்டு படம் எடுத்தால், ரொம்ப மோசமான தியேட்டர்களில் அந்த படத்தை திரையிடுகிறார்கள். அதனால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை.

 

தமிழகத்தில் இன்னும் அதிகமான சினிமா தியேட்டர்கள் வர வேண்டும். அதற்கு முன்னணி ஹீரோக்கள் தான் முன் வரவேண்டும். பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் அந்த பணத்தை சினிமா தியேட்டர்கள் கட்டுவதில் முதலீடு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பதில்லை. ஹீரோக்கள் தான் நல்லா சம்பாதிக்கிறார்கள். அவர்கள் புதிய தியேட்டர்கள் கட்டினால் சினிமா மேலும் முன்னேற்றம் அடையும்.” என்று தெரிவித்தார்.

 

மாரியப்பன் பேசும் போது, “இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான  திரு.செந்தில் செல்.அம் . அவர்கள்  என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார். 

 

எனக்குப் படத்தை போட்டும்  காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

 

மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. 

 

சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது. 2012-ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது. 

 

அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். 

 

‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள்.  சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான திரு.செந்தில்.செல்.அம் பேசுகையில், ”இந்த படத்தைப் பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை. ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறேன். நாம் செய்கிற பாவக் கணக்குகள் நம் சந்ததியை பாதிக்கும் என்பார்கள். உண்மையாய் உழைத்து, தியேட்டரில் பணம் கொடுத்து இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் திருப்தியுறுவார்கள். 

 

அவர்களை ஏமாற்ற மாட்டேன். அப்படிச் செய்திருந்தால் அதுவும் என் பாவக் கணக்கில் தான் சேரும். இந்த படம் அப்படியான படமில்லை. இன்றைய நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிற குறளில், ‘அறிவு’ என்பதை எடுத்துவிட்டு, ‘பகுத்தறிவு’ என்று மாற்றியிருப்பார். 

 

பகுத்தறிவுடன் யாரும் சிந்திக்காததால் தான் இன்று தோல்விகளும், தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்கொலை, மனித குலத்திற்கு எதிரான செயல் என்று சொல்கிற படம்.” என்றார்.