Sep 23, 2017 12:26 PM

மாணவர்கள் உயிரை பறிக்கும் கல்வி முறையை கழுவி ஊத்தும் ‘பாடம்’

மாணவர்கள் உயிரை பறிக்கும் கல்வி முறையை கழுவி ஊத்தும் ‘பாடம்’

ஏற்கனவே நமது நாட்டின் கல்வி முறையில் சரியில்லை என்று சமூக ஆர்வலர்கள் குமுறிக்கொண்டிருக்க, திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தினால், தற்போது கல்வியே மாணவர்களின் உயிரை காவு வாங்கும் எமனாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடே போராடி வரும் நிலையில், நமது நாட்டின் கல்வி முறையில் உள்ள அவலங்களை மையமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’.

 

ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜசேகர் இயக்கும் இப்படத்தை ரோலன் மூவிஸ் சார்பில் ஜிபின் தயாரித்துள்ளார். ஹீரோவாக அறிமுக நடிகர் கார்த்திக் நடிக்க, ஹீரோயினாக அறிமுக நாயகி மோனா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்பட்த்தில் நடித்திருக்க, விஜித் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

 

’பாடம்’ படம் குறித்து இயக்குநர் ராஜசேகரின் கேட்ட போது, “சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்சினையை பற்றி தன் பாடம் பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும், மொழியையும் திணித்தால் நடக்கும் சீர்கேடுகள் பற்றிய படம் தான் இந்த பாடம்.

 

ஆங்கிலம் என்பது வெறும் ஒரு மொழியே தவிர வாழ்வு முறை கிடையாது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. இதனை மையமாக வைத்து, ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையே நடக்கும் ஒரு போர் தான் இப்படத்தின் கதை. இந்த போரில் மாணவன் எப்படி எல்லாம் சவால்களை சந்தித்து வெற்றி பெற்றான் என்பதே இப்படத்தின் திரைக்கதை.

 

புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஊட்டும் படமாக இது இருக்கும். நமது முறையற்ற கல்விமுறையையும், பெற்றோர்களின் மனநிலையையும், மாணவர்கள் மீது போடப்படும் சமுதாய அழுத்தங்களையும் இப்படம் அலசும். எல்லா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை 'பாடம்’கதையுடன் இணைத்துக்கொண்டு ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்.” என்றார்.

 

கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோ ஒளிப்பதிவு செய்ய, ஜிபின் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பழனிவேல் கலையை நிர்மாணித்துள்ளார்.

 

இப்படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.