Sep 25, 2017 09:00 PM

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ’மரகதக்காடு’

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ’மரகதக்காடு’

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ள இப்படம், முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.

 

படம் குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன் கூறுகையில், “அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி பற்றி  படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க  முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின்  அடிப்படையில்  உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

 

படம் முழுவதும் தமிழக ,கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை. 

 

படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும் . அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும்  நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள  காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

 

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக்குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம்.. Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’.” என்று தெரிவித்தார்.

 

நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற  நாயகன்  அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான், காதலிக்கிறான். அந்தக் காதல்  அவனைப்  புரட்டிப் போடுகிறது. வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி  ஆண் - பெண் சேரும் ஒற்றைக்  குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும்? 

 

அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல்.

 

காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின்  நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை.

 

காதலுடன்  காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது  வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும்.

 

நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ல இப்படத்திற்கு ஜெய் பிரகாஷ் இசையமைத்துள்ளார். விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சாபு ஜோசப் எடிட்டிங் செய்ய, மார்டின் டைட்டஸ் கலையை நிர்மாணித்துள்ளார். சாய் மதி நடனம் அமைக்க, மைக்கேல் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஏ.ஜான் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.

 

’மரகதக்காடு’ படப்பிடிப்பு முழுவது முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.