Nov 17, 2018 10:31 AM

அமெரிக்க டி.ஆர் ஆன ஆரோக்கியசாமி க்ளமெண்ட்!

அமெரிக்க டி.ஆர் ஆன ஆரோக்கியசாமி க்ளமெண்ட்!

படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, நடிப்பது, இசையமைப்பது, பாடல்கள் எழுதுவது, ஒளிப்பதிவு செய்வது, எடிட்டிங், கலை என பல துறைகளை ஒரே ஆளாக செய்து சாதித்துக் காட்டியவர் டி.ராஜேந்தர். தற்போது இவரது வழியில் அமெரிக்காவில் வாழும் தமிழரான ஆரோக்கியசாமி க்ளமெண்ட், என்பவரும் பல துறைகளை தனி மனிதராக செய்து சாதித்திருக்கிறார்.

 

அமெரிக்காவில் வாழும் டி.ஆர் என்று இவரை அன்பாக அழைக்கும் அமெரிக்க தமிழர்கள் பலர் இவரது திறமையை பாராட்ட, விரைவில் வெளியாக உள்ள ‘முடிவில்லா புன்னகை’ படம் மூலம் தமிழ் ரசிகர்களும் தன்னை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் இருக்கிறார்.

 

அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களாக குடும்பத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் க்ளமெண்ட், டி.ஆர் போல வர ஆசைப்பட்ட்டு சிறுவயதில் சென்னையில் படிக்கும் போது டி.ராஜேந்தரின் பல படங்களை பார்த்து வியந்ததோடு, அவரைப் போல சினிமாவில் நாமும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு, சினிமா தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தவர், சில நணபர்களின் உதவியால் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டே, திரைப்படத்துறையின் மற்ற தொழில்நுட்பங்களையும் அறிந்து வர, சூழ்நிலை க்ளமெண்டை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல, அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகி, வசதியான சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும், தனது சினிமா ஆசை நிறைவேறவில்லையே என்ற கவலை க்ளமெண்டுக்கு இருந்தது.

 

தற்போது, அந்த கவலையையும் அவர் விரட்டியடித்துவிட்டார். ஆம், ‘முடிவில்லா புன்னகை’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, சொந்தமாக தயாரித்து, முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தும் இருக்கும் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், இசையமைத்து, இரண்டு பாடல்களை எழுதி, ஒளிப்பதிவு செய்து, அமெரிக்காவின் டி.ஆர் ஆகவே மாறிவிட்டார்.

 

‘முடிவில்லா புன்னகை’ படத்திற்கு முன்பாக பல குறும்படங்களை இயக்கி பாராட்டு பெற்ற ஆரோக்கியசாமி க்ளமண்ட்டின் குறும்படங்கள் பல அமெரிக்காவில் பல விருதுகளை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குட்சன் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் ‘முடிவில்லா புன்னகை’ படத்தை தயாரித்திருக்கிறார். இதில் ஹீரோவாக டிட்டோ என்பவர் அறிமுகமாக, ஹீரோயினாக ரக்‌ஷிதா நடித்திருக்கிறார். கூல் சுரேஷ் காமெடி கலந்த வில்லனாக நடிக்க, டெலிபோன் ராஜ், நெல்லை சிவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.