Jun 16, 2018 10:42 AM

இயக்குநராகும் நடிகர் ஷரண் குமார்!

இயக்குநராகும் நடிகர் ஷரண் குமார்!

பிரகாஷ் தயாரித்த ‘இனிது இனிது’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷரண் குமார், தொடர்ந்து ‘சார்லஸ் ஷாஃபீக் கார்த்திகா’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ’உயிருக்கு உயிராக’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர், இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

இது குறித்து கூறிய ஷரண் குமார், “நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குநரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குநர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன். அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.” என்றார்.

 

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை என்றாலும் சில குறும்படங்களை இயக்கியிருக்கும் ஷரண் குமார், ‘டீ ஆர் காஃபி’ என்ற குறும்படத்தின் மூலம் பல பாராட்டுக்களை பெற்றிருக்கிறார்.

 

தனது முதல் படத்தை டார்க் திரில்லர் படமாக இயக்கும் ஷரண், ஹீரோவாக பரத் நிவாஸை நடிக்க வைக்கிறார். படம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, “பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை. இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.” என்றார். 

 

’சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தரண் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கார்க்கி எழுதுகிறார். ’ஜாக்சன் துரை’, ’பர்மா’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்ய, சன்னி எடிட்டின்ங் செய்கிறார். சாய்ராம் கிருஷ்ணன் தயாரிப்பு நிர்வாகத்தை கவைக்க, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை ஆலோசகராக இருந்த கருந்தேள் ராஜேஷ் இப்படத்திலும் பணிபுரிகிறார்.

 

கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்குகிறது. கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால், இப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.