Jan 16, 2018 05:51 AM

சொகுசு கார் விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை அமலா பால்

சொகுசு கார் விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை அமலா பால்

கேரளாவில் ஆடம்பர கார்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் சுமார் 13 சதவீதமே வரி வசூலிக்கப்படுவதால், கேரளாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் சொகுசு காரை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கேரள அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

 

இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கையில் பிரபல நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை அமலா பால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

அதன்படி அமலா பால் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர், புதுச்சேரியில் தனக்கு வாடகை வீடு இருப்பதாகவும், அந்த முகவரியிலேயே தனது கார்களை பதிவு செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் தனது கார் பதிவு செய்யப்பட்டதில் எந்தவித வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இதற்கிடையே வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபியும் கேரள ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் கோரி இருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, அவரை கைது செய்ய 3 வாரங்கள் தடை விதித்ததுடன், வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுரேஷ் கோபிக்கும் உத்தரவிட்டு இருந்தது.