Nov 20, 2018 05:59 AM

இளம் தொழிலதிபரான அமலா பால்!

இளம் தொழிலதிபரான அமலா பால்!

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அமலா பால், நடிப்பில் உருவாகி வரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ‘அதே அந்த பறவை போல. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார்.

 

அட்வெஞ்சர் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் அமலா பால், கதையின் நாயகியாக, இளம் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தின் கதைப்படி, அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 

 

இந்த படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல் வர்ணனையாளரும், ஜனத், ஹவுஸ்ஃபுல் 3, டேஞ்சரஸ் ஐசக் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலாபாலுக்கு நெருக்கமானவராக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். 

 

இப்படத்தை இயக்கும் கே.ஆர்.வினோத், ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார்.

 

படம் பற்றி இயக்குநர் வினோத் கூறுகையில், “படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளி்ல் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில் அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது பாராட்டுக்குரியது. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பே திட்டமிட்டோம். 

 

படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.” என்றார். 

 

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை  உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.