Nov 13, 2018 07:59 AM

சூடுபிடிக்கும் ‘96’ கதை திருட்டு விவகாரம்! - புகார் அளித்த பாரதிராஜா

சூடுபிடிக்கும் ‘96’ கதை திருட்டு விவகாரம்! - புகார் அளித்த பாரதிராஜா

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்கார்’ படம் ரிலிஸுக்கு முன்பு அப்படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் முறையிட, அந்த விவகாரத்தை கையில் எடுத்த இயக்குநரும், எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான கே.பாக்யராஜ், பலவித பஞ்சாயத்துக்களுக்கு பிறகு வருண் ராஜேந்திரனுக்கு ரூ.30 லட்சத்தை சர்கார் தயாரிப்பு தரப்பிடம் இருந்து பெற்றுக் கொடுத்ததோடு, படத்தின் துவக்கத்தில் வருண் ராஜேந்திரனின் பெயரையும் இடம் பெரச் செய்தார்.

 

கதை திருட்டு விவகாரங்கள் பல தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக ஒருவருக்கு, சினிமா சங்கம் மூலம் நியாயம் கிடைத்தது சர்கார் விஷயத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகை மாபெரும் வெற்றிப் பெற்று தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘96’ படத்தின் கதையும் திருடப்பட்ட கதை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் சத்ரியன் என்பவர் ‘92’ என்ற தலைப்பில் வைத்திருந்த கதை தான் திருடப்பட்டு ‘96’ ஆக உருமாறியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம் சாட்டியிருப்பதோடு, இது தொடர்பாக ‘96’ பட தயாரிப்பாளர் நந்தகோபலிடம் பேசிய போது, அவர் தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக ‘96’ படத்தை இயக்கிய பிரேம், இது திருடப்பட்ட கதையல்ல, என்னுடைய கதை தான், என்று பத்திரிகையாளர்களை அழைத்து கூறினார்.

 

இந்த நிலையில், ‘96’ படத்தின் கதை திருட்டு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கும் பாரதிராஜா,  ”96 படத்தின் கதை தன்னுடைய உதவியாளருடையது தான், அவர் 2012 ஆம் ஆண்டே தன்னிடம் கூறினார். இதையடுத்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது. 

 

எனவே, அந்த காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.

 

இது இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்துள்ள ‘96’ எனும் படம் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ’திரு.நந்தகோபால்’ அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி. பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக்காட்டினார்கள்.

 

இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்து பேசினேன். எவ்வித முடிவு எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.

 

மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார். மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014-ல் எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு ‘96’ ஆனது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

 

தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை விசாரித்து தீர்வுகண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமலிருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.