Apr 25, 2018 05:52 AM

கார்ப்பரேட் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

கார்ப்பரேட் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது! - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிவடைந்து திரைப்படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. வாரத்திற்கு மூன்று படங்கள் என்ற கட்டுப்பாட்டோடு புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், போராட்டத்திற்குப் பிறகு முதல் படமாக வெளியானது ‘மெர்க்குரி’.

 

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் வசனம் இல்லை என்றாலும், கார்ப்பரேட் நிறுவனங்களால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், என்பதை ரொம்ப சத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இந்த வெற்றியை மாவட்டம் வாரியாக சென்று படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

 

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட ‘மெர்க்குரி’ படக்குழுவினர் விசிட் அடித்தனர். அங்கே அவர்களை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.

 

மேலும் பேசிய அவர், ”உலகத்தையே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதில் இருந்து தப்பிப்பதற்கு வழி தெரியவில்லை. தப்பிக்கவும் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். ‘மெர்க்குரி’ படமும் ஒரு போராட்ட வடிவம் தான். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.