Jun 24, 2018 06:40 AM

பெப்சி பிரச்சினை - ’பிக் பாஸ் 2’ வில் இருந்து கமல் விலகல்?

பெப்சி பிரச்சினை - ’பிக் பாஸ் 2’ வில் இருந்து கமல் விலகல்?

தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் பாகத்தைப் போல இந்த பாகத்தையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது அவர் அரசியல்வாதியாகியுள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் கருத்துக்களை கூறும் மேடையாகவும் பயன்படுத்துகிறார்.

 

இந்த நிலையில், பெப்சி பிரச்சினை காரணமாக கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பிரம்மாண்ட செட் போட்டு நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின், செட் உள்ளிட்ட பணிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 41 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதில் கமலும் அங்குவார்.

 

தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிக மிக குறைந்த அளவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து அந்த 41 பேரும் இனி பணிபுரிய மாட்டார்கள், என்று அறிவித்திருக்கும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, 41 பேரில் கமலும் அடக்கம் என்பதால் அவர் எங்கள் முடிவுக்கு மதிப்பு அளித்து நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார், என்று நம்புகிறோம், என்றும் கூறியுள்ளார்.

 

இதனால் நெருக்கடில் சிக்கியுள்ள கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 

அதே சமயம், பிக் பாஸ் முதல் சீசனிலும் இதுபோன்ற பெப்சி பிரச்சினை வந்த போது, கமல்ஹாசன் தலையிட்டு தமிழக தொழிலாளர்கள் 50 சதவீத பேரை பணிபுரிய வைத்தார். அதனால், இந்த முறையும் அவர் இந்த பிரச்சினையில் தலையிட்டு பேசி சுமூகமான தீர்வை மேற்கொள்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.