Sep 14, 2018 01:14 PM

இனி குடிக்க மாட்டேன்! - மேடையில் அறிவித்த லாரன்ஸ்

இனி குடிக்க மாட்டேன்! - மேடையில் அறிவித்த லாரன்ஸ்

அன்னை தெரசாவின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகரும் இயக்குநரும் சமூக சேவகருமான ராக்வாஅ லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில்,தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எஸ்றா சற்குணம் குமரி அனந்தன் மவுலானா இலியாஸ் ரியாஸ் தொழிலதிபர் ரூபி மனோகரன் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி பால் வசந்தகுமார் எல்.ஐ.சி ஆர்.தாமோதரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே.தாஸ் அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

 

விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், “இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கிக் கொண்டே ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு என்னை கொண்டு வருவாங்க என் அம்மா.  பஸ்ஸுக்கு காசு இல்லாததால் ..அன்றைக்கு நம்பிக்கையோடு எங்க அம்மா என்னை காப்பாத்தலேன்னா இன்னிக்கி நான் இல்லை அதனால இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன்.

 

நான் இந்தளவுக்கு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் காரை துடைக்கும் வேலை கொடுத்து ஆதரவு அளித்தது.

 

அங்கிருந்த என்னை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் “நீ டான்ஸரா சேரு” என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்து விட்டது. அதன் மூலம் டான்ஸராகி டான்ஸ் மாஸ்டராகி அமர்க்களம் மூலம் நடிகராகி இன்று தயாரிப்பாளர் இயக்குநர் என்று உருவாக எவ்வளவோ பேர் உதவி இருக்காங்க அவ்வளவு பேரையும் மேடையில் சொல்ல முடியாது. குறிப்பா சூப்பர் சுப்பராயன், சூப்பர் ஸ்டார் ரஜினி சார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, டைரக்டர் சரண், என்னை இயக்குநராக அறிமுகம் செய்த நாகார்ஜுன் சார் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கும்.

 

ராயபுரத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு நானும் அம்மா மூன்று சகோதரிகளும் வந்து வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம் என்பது சொல்லி மாளாது.

 

ஆனால் பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன்.. மக்கள் திலகத்தின் "தர்மம் தலை காக்கும்" என்ற பாடலும் சூப்பர் ஸ்டாரின் மரத்த வெச்சவன் தண்ணீ ஊத்துவான் என்ற பாடலை என் மனசுல ஏத்திக்கிட்டு நான் உதவி செய்துட்டு இருக்கேன்...சாதாரணமாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி தர்றேன் அவ்வளவு தான்.

 

இந்த விழாவுக்கு வந்திருக்கிற அன்புமணி ராமதாஸ் அவர்களை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்லலாம்.

 

பத்து வருடங்களுக்கு முன்பு அவர் அமைச்சராக இருந்த போது நான் பத்து குழந்தைகளுக்கு இருதய ஆபரேசனுக்கு யாராவது உதவினா நல்லா இருக்கும்னு ஒரு பிரஸ் மீட்டுல வெச்ச வேண்டுகோள்களை கேட்டுட்டு அவரே எனக்கு போன் செய்து எல்லா உதவிகளையும் செய்தார். 

 

திருநாவுக்கரசர் இந்த மேடையில் பேசுறத கேட்டுட்டு எனக்கு இன்னும் பொறுப்புகள் அதிகமாயிடுச்சி...

 

இன்னும் நிறைய சர்வீஸ் செய்ய வேண்டும் என்று..இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒட்டு மொத்தமாக என் பெயரை சிபாரிசு செய்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். 

 

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லை. டான்ஸரான போது நண்பர்களின் வேண்டுகோளுக்காக எப்போதாவது குடிப்பேன். அதையும் நிறுத்தியாச்சி. ரொம்ப டென்சன் இருந்தா எப்போதாவது கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது இந்த அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

 

மாற்றுத் திறணானிகளுக்கு நான் உதவியாக இருக்கிறேன் என்று சொல்வது தவறு, அவர்கள் தான் எனக்கு உதவியாக இருந்து எனக்கு இந்த விருதை பெற்று தந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

 

பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துட்டு போகப் போவதில்லை, சமீபத்தில் இறந்து போன ஜெயலலிதா அம்மாவாகட்டும் கலைஞர் அய்யாவாகட்டும் அவர்கள் சேர்த்து வைத்த பணம் எதையும் எடுத்துட்டு போகலே, அவர்கள் செய்த தான தர்மங்களைத் தான் எடுத்துட்டு போனாங்க.அதை மனசுல வெச்சி இனி அன்னை தெரசா வழியில் செயல்படுவது என முடிவெடுத்திருக்கிறேன்.” என்றார்.

 

Ragava Lawrance Mother Therasa Award

 

ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருதை அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இருவரும் வழங்கினர்.