Jan 21, 2018 09:03 AM

’ஒரு கதை சொல்லுங்க’ - குறும்பட போட்டி சீசன் 2 தொடங்கியது!

’ஒரு கதை சொல்லுங்க’ - குறும்பட போட்டி சீசன் 2 தொடங்கியது!

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கிய குறும்பட போட்டியான ‘ஃபர்ஸ்ட் கிளாப்’-ன் இரண்டாம் சீசன் நேற்று தொடங்கியது. 

 

‘ஒரு கதை சொல்லுங்க’ என்ற தலைப்பில் தொடங்கியுள்ள இந்த குறும்பட போட்டியில் பங்கேற்உம் குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க, ஹாலிவுட் தொழில்நுட்பங்களோடு சென்னையில் இயங்கி வரும் நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், இயக்குநர்கள் ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

இப்போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம். 

 

தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச்செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான பாதையை தான் நாங்கள் திறந்திருக்கிறோம். 

 

இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.

 

சீசன் 1 இல் வெற்றிப் பெற்ற இளம் இயக்குநர் ஆனந்த் என்பவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறோம். அத்துடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற குறும் பட போட்டியில் வெற்றிப் பெற்ற ஐந்து திரைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனை முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்கள். சீசன் -1 ஐ போல் சீசன் -2 போட்டியும் வெற்றிப் பெறும். 

 

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 வில் மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்பவேண்டும். போட்டியில் முதலிடத்திற்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வென்றவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும். 

 

முதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தங்களின் கதை மற்றும் திரைக்கதையை கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.” என்றார்.

 

இயக்குநர் ராம் பேசுகையில், “மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்கம் மட்டுமே இருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு என பல விசயங்களை சொல்லலாம். ஆனால் குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம். 

 

இங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும் தான் இருக்கிறது. அதனால் குறும்படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறது. இதை தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையை குறும்படமாக எடுத்தால், அது இந்த போட்டியில் வெற்றிப் பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த போட்டியில் வெற்றிப் பெற்ற படத்தை தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்து திரையரங்குகளில் திரையிடப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த தருணத்தில் முன்வைக்கிறேன். ஏனெனில் கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யாழ்பாணம் என பல இடங்களிலும் திறமையான இளங்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.” என்றார்.