Aug 21, 2018 04:24 PM

ஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை!

ஜெயலலிதா இடத்தில் முன்னணி தமிழ் நடிகை!

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஆகியோரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் போல தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பல நடிகர்களும், நடிகைகளும் அரசியல் குறித்து பேச தொடங்கியிருப்பதோடு, நேரடியாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் நேரடியாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களும் அரசியலில் இறங்க தங்களை தயார்ப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயந்தாரா விரைவில் முதல்வராகப் போகிறார். ஆம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக அவர் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

 

Nayanthara

 

மறைந்த ஜெயலலிதா அரசியலில் மட்டும் இன்றி சினிமாவிலும் உச்சத்தை தொட்டவர். சினிமாவைப் போல அரசியலிலும் பல சாதனைகளை நிகழ்த்திய அவரது வாழ்க்கை திரைப்படமாக உள்ளது.

 

ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இருப்பதாக பாலிவுட் நிறுவனம் ஒன்றி அறிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே என்.டி.ஆர் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருவதோடு, கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கையையும் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். இவர்கள் எடுக்க இருக்கும் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படத்தை இயக்குநர் விஜய் இயக்க இருக்கிறார். இதில் ஜெயலலிதா வேடம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் இந்திய சினிமாவின் முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், வரலட்சுமிக் நடிக்கும் ‘சக்தி’ படத்தை இயக்கும் பெண் இயக்குநரான பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். இவரும் தான் இயக்கப் போகும் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்த நிலையில், பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப் போகிறாராம். இந்த பட்த்தை தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து இன்று அறிவித்திருக்கிறது. இதில் நடிகர்கள் கமல், மோகன்லால் இருவரில் ஒருவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இப்படி ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் களம் இறங்கினாலும், இந்த மூவரும் ஜெயலலிதாவின் வேடத்தில் நயந்தாராவை நடிக்க வைக்கவே விரும்புகிறார்களாம்.

 

நயந்தாராவுடன் அனுஷ்காவும் பரீசிலனையில் இருந்தாலும், நயந்தாராவுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நயந்தாரா கச்சிதமாக் பொருந்தியதால், ஜெயலலிதா வேடத்திலும் அவர் பொருந்துவார் என்பதால், அவரையே ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

 

Nayanthara in Aram

 

ஆனால், இந்த மூன்று தயாரிப்பாளர்களில் நயந்தாரா யாருக்கு கால்ஷீட் கொடுப்பார் என்பது தான் தற்போது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.