Aug 21, 2018 04:16 AM

இந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா

இந்திய அளவில் பேசப்படும் படமாக ’லக்‌ஷ்மி’ இருக்கும் - பிரபு தேவா

’தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா - இயக்குநர் விஜய் கூட்டணி ’லக்‌ஷ்மி’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

 

பிரபு தேவாவின் நடனத்திற்கு பலர் அடிமைகளாக இருக்க, அவரது நடிப்பில் உருவாகும் நடனத் திரைப்படம் என்பதாலும், இந்தியா முழுவதிலும் சிறந்த நடனம் ஆடும் சிறுவர்கள் பலர் இதில் நடித்திருப்பதாலும், இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

 

வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

 

Lakshmi

 

பிரபு தேவா பேசுகையில், “படத்தை பார்த்த ரவீந்திரன் சார் வாங்கி விட்டார், அதுவே படம் நல்லா இருக்கு என்பதை சொல்கிறது. இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். எனவே இந்த படம் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். தேவி, லக்‌ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜேஷ். ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். குழந்தைகள் மக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார். சலங்கை ஒலி என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பேசுகையில், “இதுவரை நிறைய ஹாரர், திரில்லர் மாஸ் திரைப்படங்களுக்கு தான் இசையமைத்திருக்கிறேன். முதன் முறையாக ஒரு டான்ஸ் படத்துக்கு இசையமைத்தது, அதுவும் நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் நடிக்கும், நடனமாடும் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சியான விஷயம். சின்ன வயதில் பிரபுதேவா சார் படங்களை ரசித்து பார்த்து விட்டு, அவர் படத்துக்கு இசையமைப்பது ஒரு சிறந்த உணர்வு. கரு படம் முடிந்தவுடன், மீண்டும் இந்த படத்துக்கு என்னை இசையமைக்க சொன்னார். இந்த படத்துக்குள் நடனம் தாண்டி பலவிதமான எமோஷன் இருக்கிறது. எமோஷனல் மியூசிக்கல் டான்ஸ் படமாக வந்திருக்கிறது. இந்த குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் படம் இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “தேவி படம் இயக்கிக் கொண்டிருந்த போது, ப்ரதீக் மற்றும் ஸ்ருதியை சந்தித்தேன். இந்த கதையின் ஐடியாவை சொன்னேன். உடனடியாக இந்த படத்தை தயாரிக்க முன்வந்தனர். என்ன தான் கஷ்டப்பட்டு படத்தை எடுத்தாலும் அதை கொண்டு சேர்ப்பது முக்கியம். அந்த நேரத்தில் தான் ரவீந்திரன் சார் படத்தை பார்த்து இந்த படத்துக்குள் வந்தார். பிரபுதேவாவை வைத்து டான்ஸ் படம் பண்ணா எப்படி இருக்கும் என்ற ஐடியாவை எனக்கு கொடுத்தது நிரவ்ஷா தான். பிரபுதேவா சார் டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும் என்றார். இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதிக அக்கறை  எடுத்து உழைத்து கொடுத்தார். அவர் எங்கள் டீமுக்கு மிகப்பெரிய பில்லர். படத்துக்கு எது தேவை என்றாலும் பிரபுதேவா சாரிடம் தான் போய் நிற்பேன். ஐஸ்வர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷோஃபியை ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு பரிந்துரைத்ததே ஐஸ்வர்யா தான். ஆண்டனி தான் என் சினிமாவின் முதல் ஆடியன்ஸ். இந்திய முழுக்க நிறைய பேரை ஆடிஷன் செய்து இந்த படத்தில் நடிக்க நடிக்க வைத்திருக்கிறோம். பேபி தித்யா இந்த படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிப்பார். சாம் சிஎஸ் படத்தின் மிகப்பெரிய பில்லர். அவர் இசை படத்துக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்திருக்கிறது. ஒரு நல்ல, தரமான படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ”நாசர் சார் மகன் பாஷா என்னிடம் விஜய் சார் ஒரு படம் பண்ண போறார், ஒரு 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும், நடிக்கிறாயா என்று கேட்டார். விஜய் சார் கதை சொன்னபோது உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். திருமணத்திற்கு முன்பே காக்கா முட்டை, ஆறாது சினம், லக்ஷ்மி படங்களில் குழந்தைகளுக்கு  அம்மாவாக நடித்து விட்டேன். அவர்கள் ரொம்பவே ஸ்பெஷல். ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் இருந்து நான் வந்திருந்தாலும், இந்த படத்தில் எனக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவா சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்றார்.” என்றார்.

 

இந்த சந்திப்பில் நடிகை ஷோபி, நடிகர் சாம் பால் கலை இயக்குனர் ராஜேஷ், படத்தொகுப்பாளர் ஆண்டனி, பேபி தித்யா, தயாரிப்பாளர் பிரதீக் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.