Nov 18, 2018 04:38 AM

மீ டூ புகார் கூறிய சின்மயிக்கு செக்! - சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்

மீ டூ புகார் கூறிய சின்மயிக்கு செக்! - சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்

பிரபல பின்னணி பாடகி சின்மயி கடந்த மாதம் கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், வைரமுத்து மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறிய சின்மயிக்கு பல சினிமாத் துறையினர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

 

யார் எந்த வகையில் எதிர்த்தாலும் பரவாயில்லை என்று வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை சின்மயி கூறி வந்ததை தொடர்ந்து, மேலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து கூறியதோடு, சிலரது பெயர்களையும் வெளியிட்டதால், மீ டூ விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இப்படி தொடர்ந்து தினம் ஒரு மீ டூ விவகாரம் பற்றி கோடம்பாக்கத்தில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது சில வாரங்களாக அந்த பிரச்சினை இல்லாமல் இருக்கிறது.

 

இந்த நிலையில், வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த சின்மயிக்கு சினிமா உலகம் செக் வைத்தது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அதாவது, பாடகியாக இருக்கும் சின்மயி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். சமந்தா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு சின்மயி தான் டப்பிங் பேசி வருகிறார். இதனால், இவர் டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்து வந்த நிலையில், தற்போது இவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கியுள்ளனர். அதற்கான காரணமாக, கடந்த 2 வருடங்களாக சின்மயி எந்தவித கட்டணமும் சங்கத்திற்கு கட்டாததால் அவரை நீக்கிவிட்டார்களாம்.

 

சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் டப்பிங் பேசக்கூடாது, என்பதால் இனி சின்மயினால் டப்பிங் பணியை மேற்கொள்ள முடியாது. அவர் இறுதியாக ‘96’ படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.