Oct 17, 2018 04:15 PM

’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ!

’முடிவில்லா புன்னகை’ பட தயாரிப்பாளரை அழ வைத்த அறிமுக ஹீரோ!

‘முடிவில்லா புன்னகை’ என்று தனது முதல் படத்திற்கு தலைப்பு வைத்த தயாரிப்பாளர் ஒருவர், அப்படத்தின் ஹீரோவினால் கண்ணீர் விட்டு அழும் நிலைக்கு சென்றிருக்கிறார்.

 

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில்  ஆரோக்கியசாமி க்ளமெண்ட் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’. இதில் ஹீரோவாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, ஹீரோயினாக பெங்களூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ரக்‌ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் டெலிபோன் ராஜ், நெல்லை சிவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சென்னையை சேர்ந்த ஆரோக்கியசாமி க்ளமெண்ட், பி.காம் பட்டதாரியாக இருந்தாலும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர அவர் முயற்சித்தாலும், அங்கிருக்கும் அரசியலால் அது நடக்காமல் போயிருக்கிறது. இதையடுத்து பி.காம் பட்டப்படிப்பை முடித்தவர், தனது வீட்டு பக்கத்தில் இருந்த நடிகர் லிவிங்ஸ்டன்னுடன் பயணிக்க தொடங்கி, முழுமையாக தன்னை சினிமாவில் ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கிடைத்த நட்பினால், ‘குஷி’, ‘தீனா’, ‘தம்’ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அங்கேயே  செட்டிலாகிவிட்டார். அமெரிக்காவில் இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்ட க்ளமெண்ட், அமெரிக்காவில் பல்வேறு குறும்படங்களை இயக்கியுள்ளார்.

 

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து ‘நிஜம்’ என்ற குறும்படத்தை இயக்கியவர், அமெரிக்காவில் வாழும் தமிழர்களை மையமாக வைத்து ‘பாதை’, ‘ஈர்ப்பு’ ஆகிய குறும்படங்களை இயக்கி அனைவரிடமும் பாராட்டு பெற்றார்.

 

தற்போது ‘முடிவில்லா புன்னகை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என ஒரே சமயத்தில் மூன்று பரிமாணங்களை எடுத்திருக்கும் அவர், தனது படம் குறித்தும் படம் எடுத்த அனுபவம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துக் கொண்டது இதோ,

 

Mudivilla Punnagai

 

“சின்ன வயதில் இருந்தே சினிமா மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அதனால், தான் அமெரிக்காவில் செட்டிலான பிறகும் கதை எழுதுவது, குறும்படம் எடுப்பது என்று இருந்தேன். இந்தியாவில் இருந்த நண்பர் ஒருவர், ஒரு நாள் நடக்கும் கதை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கலாம், என்று கூறினார். அவருடன் இணைந்து அப்படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். ஆனால், அவரது கதை எனக்கு திருப்திக்கொடுக்கவில்லை. அதனால் அந்த கதையை நான் மாற்றி எடுத்தேன். மேலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்க் பதிலாக முதலில் இருந்தே எடுக்க வேண்டிய சூழல் வந்ததால், பட்ஜெட் இரண்டு மடங்காக அதிகரிக்க தொடங்கியது. சரி தொடங்கி விட்டோம், முடித்து விடுவோம் என்று பல கஷ்ட்டங்களுக்கு இடையே படத்தை நான் முடித்துவிட்டேன், இப்படி தான் பட தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நான் வந்தேன்.

 

படத்தில் நான் நடித்ததும் எதிர்பாராத ஒன்று தான். எனது படத்திற்காக ஹீரோ ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது டிட்டோ என்பவர் என்னிடம் வாய்ப்பு கேட்டார். நானும் அவரை ஆடிசன் செய்தேன். அவரும் ஏற்கனவே ‘காஞ்சனா 2’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்திருந்தார். அதனால் அவரையே நான் ஹீரோவாக்கி நடிக்க வைத்தேன். முதல் ஷெட்யூலில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த டிட்டோ, இரண்டாம் ஷெட்யூல் போகும் போது ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டார். அவர் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன், என்றும் அடம்பிடிக்க தொடங்கிவிட்டார். இதனால், கதையில் மாற்றம் செய்து, டிட்டோ கதாபாத்திரத்தை முதல் பாதிவரை வைத்து விட்டு, இரண்டாம் பாகத்தில் புது கதாபாத்திரம் ஒன்றை அறிமுகம் செய்து அதில் நானே நடித்தேன். வாய்ப்பு கேட்கும் போது ரொம்பவே பவ்வியமாக கேட்ட டிட்டோ, பாதி படம் முடிந்த பிறகு எனக்கு கொடுத்த தொல்லைகளால் நான் கண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், படத்தின் ஹீரோயின் ரக்‌ஷா எனக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார்.

 

அவரை நான் ஆடிசன் செய்யும் போது அவருக்கு தமிழ் தெரியவில்லை. அதனால் அவருக்கு ஒரு மாதம் தமிழ் கற்றுக்கொடுத்து பிறகு நடிக்க வைத்தேன். ரொம்பவே சிறப்பாக நடித்ததோடு, எனது கஷ்ட்டத்தை புரிந்துக்கொண்டு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தார்.

 

ஹீரோயினைப் போல, படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கூல் சுரேஷும் எனக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். சம்பளம் என்று எதையும் நிர்ணயிக்காமல் எனக்காக அவர் இந்த படத்தில் நடித்தார். 25 வருடங்களாக எனக்கு கூல் சுரேஷை தெரியும், அவரிடம் இப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறியவுடன், சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். படப்பிடிப்பிலும் எனக்கு பக்கபலமாக இருந்தார். பெரிய அளவில் உணவு, தங்கும் இடம் என்று எதையும் கேட்காமல், என்ன கொடுத்தாலும் அதை சாப்பிட்டுக் கொண்டு, ஒரு துண்டை விரித்து படுத்துக் கொண்டு, இந்த படத்தை முடிக்க எனக்கு கூல் சுரேஷ் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு பெரிய பெயர் கிடைப்பதோடு, அவரைப் போன்ற தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நடிகர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

 

மேலும், படத்தில், வாட்ச் மேன் கதாபாத்திரம் ஒன்று வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் டெலிபோன் ராஜ் என்பவர் நடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான வேடமான இந்த வேடம் மக்களால் பெரிதும் பேசப்படும். இதில் முதலில் சிங்கமுத்துவை நடிக்க வைக்க முயன்றோம். ஆனால், அவர் கேட்ட சம்பலம் பெருஷாக இருந்ததால், எனது குடும்ப நண்பர் லிவிங்ஸ்டன்னிடம் இந்த வேடத்தில் நடிக்குமாறு கேட்டேன், ஆனால், அவரும் பல வருட நட்பை பார்க்காமல், பணத்தை தான் பார்த்தார். அதனால், தான் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த டெலிபோன் ராஜுக்கு, இந்த வேடம் கொடுத்தேன், அவரும் எனது நம்பிக்கைக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நிச்சயம் இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வரும்.” என்று தனது படம் குறித்து நம்மிடையே க்ளமெண்ட் பகிர்ந்துக் கொண்டார்.

 

தற்போது நாட்டில் விவாகரத்து என்பது பெரிகிவிட்டது. இளம் தம்பதியினரிடையே விவாகரத்து என்பது சர்வசாதரணமாகிவிட்ட நிலையில், இப்படம் அத்தகைய நிலையை மாற்றும் அளவுக்கு சிறப்பான மெசஜை சொல்வதோடு, சினிமாத்துறையில் இருக்கும் கஷ்டங்களை பற்றியும் பேசுகிறது. சினிமா என்பது கடல் போல, அதில் நீச்சல் அடித்து கரை சேர்வது என்பது மிக மிக கடினம், என்பதையும் இப்படம் விளக்குகிறதாம்.

 

Mudivilla Punnagai

 

செண்டிமெண்ட், காதல், காமெடி, மெசஜ் என்று அனைத்தையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு உருவாகியுள்ளது, என்று கூறும் இயக்குநர் க்ளமெண்ட், இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை அமெரிக்காவில் திரையிட்டாராம். அதில் படத்தை பார்த்தவர்கள் அனைவரும், படம் சிறப்பாக இருக்கிறது, என்று கூறினார்களாம். முக்கியமாக பெண்கள் வெகுவாக பாராட்டியதோடு, தற்போதைய காலக்கட்டத்திற்கு அவசியமான படம், என்றும் கூறினார்களாம்.

 

டிசம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், விரைவில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வை நடத்த இருக்கிறார். பாரதிராஜா முன்னிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கும் அவர், விழாவில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சிறப்பான உணவு, உடை ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.