Oct 20, 2017 06:52 PM

தொடரும் ‘மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள், தலைவர்கள்!

தொடரும் ‘மெர்சல்’ சர்ச்சை - விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள், தலைவர்கள்!

மிகப்பெரிய போராட்டத்தோடு வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தற்போது மிகப்பெரிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. ஜிஎஸ்டி குறித்து படத்தில் விஜய் பேசியுள்ள வசனத்திற்கு பாரதிய ஜனாதா கட்சி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அக்கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் காட்சிகளை நீக்காவிட்டால் படம் ஓடாது, என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

பா.ஜ.க-வின் மிரட்டலால் மெர்சல் தயாரிப்பாளர் காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் காட்சிகள் நீக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதிகூறியதாகவும் கூறப்பட்டாலும், உண்மையில் தயாரிப்பு தரப்பு காட்சிகளை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

 

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தணிக்கை செய்யப்பட்ட படத்தில் இருந்து காட்சிகளை நீக்க கூடாது என்று கூறியுள்ளார். அதேபோல், மதிமுக தலைவர் வைகோவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், மெர்சல் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மெர்சல் திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள். மாற்றுக் கருத்துகளை முன்வைக்கப்படும் போது தான் இந்தியா மிளிரும், என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், பா.ஜ.க பிரமுகரான நடிகை காயத்ரியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தமிழிசையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

மேலும், தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதம் நிகழ்ச்சிகளிலும், ‘மெர்சல்’ படத்தில் காட்சிகளை நீக்க  தேவையில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

 

இதன் காரணமாக, ‘மெர்சல்’ படம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் இருந்தாலும், மறுபுறம் படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.