Oct 14, 2018 04:17 PM

‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்

‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படம் - விஷால்

இயக்குநர் லிங்குசாமி, விஷால், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சண்டக்கோழி 2’ ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

 

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும், நடிப்பும் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை ‘சண்டக்கோழி 2’ படக்குழுவினர் சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் விஷால் பேசுகையில், “இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி.” என்றார்.

 

Sandakozhi 2 Press Meet

 

மேலும், மீ டூ விவகாரம் பற்றி விஷாலிடம் கேட்ட போது, “நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சினை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.” என்றார்.