Oct 23, 2018 10:28 AM

பாரதிராஜா, சசிகுமாரை வைத்து சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’

பாரதிராஜா, சசிகுமாரை வைத்து சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’

பல வகையான ஜானரில் வெற்றிப் படங்களை கொடுக்கும் திறன் படைத்த இயக்குநர் சுசீந்திரன், முன்னணி ஹீரோக்கள், வளரும் ஹீரோக்கள், அறிமுக ஹீரோக்கள் என்று பலதரப்பட்ட நடிகர்களையும் தனது கதையின் நாயகர்களாக்கி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில், சுசீந்திரன் அறிமுக ஹீரோ ரோஷனை வைத்து இயக்கியிருக்கும் ‘ஜீனியஸ்’ அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ‘சாம்பியன்’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணியை தொடங்கியிருக்கும் சுசீந்திரன், தனது புதிய படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

 

‘கென்னடி கிளப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குநர் பாரதிராஜா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே ‘பாண்டிய நாடு’ படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்து பாராட்டு பெற்ற சுசீந்திரன், இப்படத்தின் மூலம் அவருடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். இவர்களுடன் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, செளமியா, ஸிம்ரிதி, செளந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான வில்லனை பாலிவுட்டில் தேடி வருகிறார்கள்.

 

குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சேகர்.பி கலையை நிர்மானிக்க, நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

 

இயக்குநர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக் குழுவின் நிறுவனர். அவர் கடந்த 40 வருடங்களாக கபடி குழுவை நடத்தி பலருக்கு பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இப்படத்திலும் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் பலர் நடிக்க உள்ளனர்.

 

பழனியை கதைக்களமாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. படத்தை தமிழ் புத்தாண்டன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.