Jul 22, 2018 01:33 PM

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

ஒரு திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றிப் பெறுவதைக் காட்டிலும், அத்திரைப்படத்தில் சொல்லப்பட்ட விஷயம் மக்களையும், சமூகத்தையும் சென்றடைவது தான் அப்படத்திற்கான மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில், கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் விவசாயிகள் பற்றி சொல்லப்பட்ட ஒரு விஷயம் அரசாங்கத்தையே சென்றடைந்திருக்கிறது.

 

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்ற மவுத் டாக்கை பெற்றிருக்கும் இப்படத்தில் குடும்ப உறவுகள் பற்றி சொல்லியிருப்பதோடு, விவசாயமும், விவசாயியும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார். 

 

இந்த காட்சியின் பிரதிப்பாக தற்போது தமிழக அரசு, பேருந்துகளில் விவசாய பொருட்களை இலவசமாக ஏற்றலாம், என்று ஆணை பிறப்பித்துள்ளது.

 

தங்களது படத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் தமிழக அரசை சென்றடைந்திருப்பதோடு, அதற்கான நடவடிக்கையிலும் தமிழக அரசி இறங்கியது எண்ணி ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழி மகிழ்ச்சியில் உள்ளனர்.