Sep 24, 2017 01:20 PM

விஜய் படத்தின் தலைப்பு மாறுகிறது - புதிய தலைப்பின் விபரம்!

விஜய் படத்தின் தலைப்பு மாறுகிறது - புதிய தலைப்பின் விபரம்!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 100 வது படமான இப்படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாக இருந்த நிலையில், படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில் தான் படம் தயாரிக்க இருப்பதாகவும், அந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துவிட்டதாகவும், தற்போது மெர்சல் என்ற தலைப்பில் விஜய் படம் உருவாவதால், தன்னால் படம் எடுக்க முடியது. எனவே அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும், என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் அக்டோபர் 3 ஆம் தேதிவரை மெர்சல் என்ற தலைப்பில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய கூடாது என்று இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மெர்சல் படக்குழுவினர் சார்பில், நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கபப்ட்டிருப்பதால், விளம்பரத்தை நிறுத்தினால் படத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும், எனவே விளம்பரம் செய்ய அனுமதிக்க வேண்டும், என்று எதிரிவித்திருந்தனர். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘மெர்சல்’ என்ற தலைப்பை மாற்றிவிட்டு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தலைப்பு வைக்க, தயாரிப்பு தரப்பு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாலும், பெரிய அளவில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாலும், எந்தவித பிரச்சினையும் இன்றி படத்தை ரிலிஸ் செய்ய தலைப்பு மாற்றும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதேபோன்ற தலைப்பு பிரச்சினையால் விஜயின் ‘துப்பாக்கி’ மிகப்பெரிய அளவில் பிரச்சினையை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.