Oct 08, 2018 12:31 PM

வாரிசு அரசியலை தொடங்கிய தேமுதிக! - விஜயகாந்தின் மூத்த மகன் அரசியல் எண்ட்ரி

வாரிசு அரசியலை தொடங்கிய தேமுதிக! - விஜயகாந்தின் மூத்த மகன் அரசியல் எண்ட்ரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, சட்டமன்ற எதிர்கட்சியாக திகழ்ந்ததோடு, பல அரசியல் கட்சிகளுக்கு சவாலாகவும் திகழ்ந்தார்.

 

இதற்கிடையே, சட்டமன்றத்தில் அவர் நடந்துக் கொண்ட விதம், தேர்தல் பிரச்சாரத்தின் போது கோபப்படுவது, தனது கட்சி உறுப்பினர்களை அடிப்பது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அடிப்பது, போன்ற செயல்களால் அவர் பெரிதும் சர்ச்சையில் சிக்கினார். மேலும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாலும் அரசியலில் திறம்பட செயல்படாமல் போன விஜயகாந்தின் ஒவ்வொரு செயலையும், மக்கள் காமெடியாக பார்க்க தொடங்கினார்கள். இதனால், தேமுதிக- மீதான எதிர்ப்பார்ப்பும், அக்கட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் குறைந்ததோடு, அக்கட்சியில் இருந்த சில முக்கிய நபர்கள் கட்சியை விட்டு விலகிவிட்டார்கள். இதனால், அக்கட்சி பலம் இழந்த கட்சியாகிவிட்டது.

 

இந்த நிலையில், விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், அரசியலில் ஈடுபட உள்ளார்.

 

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் தேமுதிகவின் 14-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய விஜயபிரபகாரன், இளைஞர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும், ”இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் புதிதாக செய்துவிட போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைதான் நானும் செய்யப் போகிறேன். இதற்காக என்னுடன் இளைஞர்களும் இணைந்து அதனை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.