Nov 29, 2018 11:55 AM

’2.0’ விமர்சனம்

8f75f626e029e827dd67769b9de69d3f.jpg

Casting : Rajnikanth, Akshay Kumar, Amy Jackson

Directed By : Shankar

Music By : AR Rahman

Produced By : Lyca Productions

 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாகவும், இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாகவும் வெளியாகியிருக்கும் ‘2.0’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

மக்களிடம் இருக்கும் செல்போன்கள் திடீரென்று பறவை போல பறந்து மாயமாவதோடு, செல்போன் விற்பனையாளர், நெட்வொர்க் நிறுவன உரிமையாளர், அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதோடு, செல்போன் டவர்களும் அழிக்கப்படுகிறது. இதை செய்வது யார்?, எப்படி செய்கிறார்கள்?, என்பது குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறும் அரசு, விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்துகிறது. அப்போது இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, தான் உருவாக்கப்பட்ட சிட்டி ரோபோவால் தான் முடியும், அதனால் சிட்டியை களத்தில் இறக்க வேண்டும், என்று ரஜினி  யோசனை சொல்கிறார். ஆனால், அரசால் தடை செய்யப்பட்ட சிட்டி ரோபோவால் மீண்டும் ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணத்தில் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, ராணுவ பாதுகாப்போடு மீண்டும் புதிய செல்போன் டவர்களை நிறுவும் பணியில் ஈடுபட, ராணுவத்தினரை அழித்து செல்போன் டவர்கள் அழிக்கப்படுவதோடு, தொலைத்தொடர்பு அமைச்சரும் கொல்லப்பட, களத்தில் சிட்டி ரோபோவை இறக்க அரசு அனுமதி வழங்குகிறது.

 

செல்போனுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் நடக்கும் இந்த மாயை போராட்டத்தை நடத்துபவரை சிட்டி ரோபோ எப்படி கண்டுபிடித்து அழிக்கிறது, என்பது தான் ‘2.0’ படத்தின் மீதிக்கதை.

 

படத்தின் டைடில் கார்டு போடும் போதே நம்மை பிரமிக்க செய்யும் அளவுக்கு 3டி தொழில்நுட்பம் படு ஜோராக இருக்கிறது. அதிலும், செல்போன்கள் பறவை போல பறந்து மாயமாக தொடங்கியதுமே, படம் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது. அதன் பிறகு, நடப்பவைகள் அனைத்தும் பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.

 

’எந்திரன்’ படத்தில் திரைக்கதையோடு, கிராபிக்ஸையும் நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களை மிரட்டிய இயக்குநர் ஷங்கர், அதன் தொடர்ச்சியான இந்த படத்தில் கிராபிக்ஸு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தில் வரும் ராட்சச பறந்து, சிட்டி ரோபோ என்று விஷுவல் எபெக்ட்ஸ் பணி சிறப்பாக உள்ளது. படம் முழுவதுமே ஏதோ ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

 

வசீகரன், சிட்டி ரோபோ என்று இரண்டிலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கும் ரஜினிகாந்த், கதைக்காக அக்‌ஷய் குமாருக்கு அதிகமாக வாய்ப்பளித்து தனது பெருந்தன்மையை காட்டியிருக்கிறார். வசீகரனாகவும், சிட்டி ரோபோவாகவும் அமைதியாக நடித்திருப்பவர், சிட்டி 2.0 ரோபோவாக தனது ஸ்டைலிஷ் நடிப்பு மூலம் கைதட்டல் பெறுகிறார்.

 

அக்‌ஷய் குமார் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும், அவரும் ஹீரோவாகவே வலம் வருகிறார். பக்‌ஷிராஜா என்ற வேடத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கும் அக்‌ஷய் குமார், ஆக்ரோஷமான வில்லனாக அவதாரம் எடுக்கும்போது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

எமி ஜாக்சன் டூயட் பாடும் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் படத்தின் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

 

இயக்குநர் ஷங்கரின் காட்சி அமைப்பும், விஷுவல் எபெக்ட்ஸும் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கிறதோ அதே அளவுக்கு நீரோவ்ஷாவின் ஒளிப்பதிவும், முத்துராஜின் கலை வடிவமைப்பும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ஒரு சில இடங்களில் மிரட்டினாலும், ஷங்கருடன் அவர் இணையும் போது கிடைக்கும் அவுட்புட் இந்த படத்திற்கு கிடைக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுவதோடு, குறிப்பிட்ட பீஜியம் என்று சொல்லும்படியும் படத்தில் எதுவும் இல்லை.

 

கதைக்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும் விஷுவல் எபெக்ட்ஸு அதிகமாக இயக்குநர் ஷங்கர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படம் முழுவதையும் ஹாலிவுட் ஸ்டைலில் கையாண்டிருப்பவர், அமானுஷய சக்தியை, அறிவியல் விஞ்ஞானத்துடன் சேர்த்து சொல்லியிருக்கும் கதை ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், பாமரர்களுக்கு புரியுமா? என்பது சற்று சந்தேகம் தான். இருந்தாலும், விஷுவலாக படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.

 

படத்தின் துவக்கத்தில் படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், செல்போன்கள் மாயமாவதற்கு பின்னணியில் இருப்பவர் பற்றியும், அவரது பிளாஷ்பேக் பற்றி விவரிக்கும் போது திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்படுகிறது. பிறகு சிட்டியின் வருகையால் படம் மீண்டும் ஜெட் வேகத்தில் பறக்க, அதன் பிறகு வரும் 2.0 ரோபோவால், இன்னும் பல சர்பிரைஸுகளை ஷங்கர் நமக்காக வைத்திருப்பார், என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது. ஆனால், 2.0 ரோபோ தனது சாகசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிகழ்த்துவது, நம்மை ஏமாற்றும்படியாக இருக்கிறது.

 

ஸ்டேடியத்தில் வில்லனுக்கும், சிட்டி 2.0 ரோபோவுக்கும் இடையே நடக்கும் சண்டையும், சாகசங்களும் மிரட்டலாக இருக்கிறது. இந்த எப்பிசோட்டை சிறுவர்கள் கொண்டாடுவார்கள் என்பது உறுதி.

 

பிரம்மாண்டமான காட்சி அமைப்பு, பிரமிக்க வைக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் போன்றவை படத்தில் நிறைந்திருந்தாலும், அவற்றோடு இயக்குநர் ஷங்கரின் சமூக சிந்தனையும் நிறைந்திருக்கிறது.

 

படம் முழுவதையும் விஷுவல் எபெக்ட்ஸே ஆக்கிரமித்திருப்பது சில இடங்களில் சிலருக்கு நெருடலாக இருந்தாலும், இந்திய சினிமாவில் இப்படி ஒரு பர்ப்பெக்ட்டான விஷுவல் எபெக்ட்ஸ் படம் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போகிறவர்களுக்கு இந்த 2.0 மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

 

மொத்தத்தில், ‘2.0’ பிரம்மாண்டமான பிரமிப்பு

 

ரேட்டிங் 4/5