Aug 11, 2017 10:17 AM

வேலையில்லா பட்டதாரி 2 விமர்சனம்

f5384fbd613d5394b6e5104f0bfed675.jpg

Casting : தனுஷ், கஜோல், அமலா பால், விவேக், சமுத்திரக்கனி

Directed By : சவுந்தர்யா ரஜினிகாந்த்

Music By : ஷான் ரோலண்ட்

Produced By : வி கிரியேஷன்ஸ் - கலைப்புலி எஸ்.தாணு, வுண்டர் பார்

வெற்றிப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம், அப்படத்தை விட இரண்டல்ல மூன்று மடங்கு பெட்டர் படம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இந்த இந்த  ‘வேலையில்லா பட்டதாரி 2’.

 

சிறந்த பொறியாளருக்கான விருது பெறும் ஹீரோ தனுஷை, தென்னிந்தியாவின் நம்பர் ஒன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் முதலாளியான கஜோல், தனது ஊழியராக்க விரும்புகிறார். ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னுடன் உழைத்து தனது கட்டுமானத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவிய நண்பர்களுடன் சேர்ந்து தனி நிறுவனம் தொடங்குவதே தனது திட்டம், என்பதால் கஜோலின் ஆபரை தனுஷ் மறுத்துவிடுவது மட்டும் இன்றி, கஜோலுக்கு கிடைக்க வேண்டிய புரோஜக்ட் ஒன்றை தனது சாமர்த்தியத்தால் தனது நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுத்துவிடுகிறார். இதனால் கோபடமடையும் கஜோல், தனுஷுக்கு பிரச்சினை கொடுக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் மீதிக்கதை.

 

முதல் பாகத்தில் வேலையில்லாமல் இருக்கும் தனுஷ் படம் முடியும் போது நல்ல நிறுவனத்தில், நல்ல பொறுப்பில் இருக்கிறாரே, பிறகு எப்படி இரண்டாம் பாகத்திலும் வேலையில்லா பட்டதாரி ஆவார்? என்ற கேள்விக்கு மிகச்சரியான விடையாக சவுந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை அமைந்திருப்பதோடு, முதல் பாகத்தின் களத்தில் கதையை நகர்த்தினாலும், பாதையை வேறு விதமாக அமைத்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

 

ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில், பழைய மொபட்டை வைத்துக் கொண்டு, வில்லன்களிடம் பஞ்ச், அமலா பாலுடன் ரொமான்ஸ், அப்பாவுடன் மோதல், அம்மாவுடன் பாசம் என்று அனைத்து ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டு அடித்த தனுஷ், இந்த பாகத்தில் அனைத்திலும் வித்தியாசத்தைக் காட்டி நடித்துள்ளார். அதிலும், மனைவி அமலா பாலுடன் மாட்டிக்கொண்டு அவர் திண்டாடும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சத்தத்தால் தியேட்டரையே அதிர செய்கிறது.

 

கஜோலுக்கு கொடுக்கப்படும் அதிரடியான எண்ட்ரி தொடங்கி, அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் வசுந்தரா என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமானவர் இவர் தான், என்பதை நிரூபித்ததுடன், படத்தின் மற்றொரு ஹீரோவாகவும் கஜோல் வலம் வருகிறார்.

 

தனுஷ் - அமலா பால் இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி குறைவு தான் என்றாலும், புருஷன் - பொண்டாட்டி இடையே ஏற்படும் மோதல் கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாகவே வேலை செய்திருக்கிறது. குடித்துவிட்டு வரும் தனுஷை அமலா பால் பேய் ஓட்ட, அவரை சமாதானப்படுத்த தனுஷ் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களும் அவருக்கே எதிராக திரும்பும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

முகத்தைக் காட்டாத தங்கபுஷ்பம் என்ற கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு விவேக் பண்ணும் காமெடி நம்மை மீண்டும் சந்தோஷப்படுத்துகிறது. கண்டிஷனான அப்பாவாக இருந்த சமுத்திரக்கனியின் வேடத்தை அப்படியே உல்டாவாக மாத்தியிருப்பதோடு, அவர் மூலம் நம்மை சிரிக்க வைப்பதோடு, எப்போதும் போல மெசஜும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

திருமணமான ஆண்கள் படும்பாட்டை நகைச்சுவையாக சொல்லியிருப்பதோடு, பெண்கள் தரப்பு நியாயத்தையும் இயல்பாக சொல்லி கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை மெசஜாக சொல்லாமல் நகைச்சுகையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சவுந்தர்யா.

 

பாடல் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தாலும், ஏ செண்டர் ரசிகர்களையும் கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தை காட்டுகிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களை உற்சாகப்படுத்துகிறது. சமீர் தாஹீரின் இசையில் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தாலும், ‘விஐபி’ என்ற படத்தின் எசன்ஸ் மாறாமலும் இருக்கிறது.

 

தனுஷ் என்ற மாஸ் ஹீரோவை எப்படி காட்ட வேண்டும் என்பதில் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. தனுஷின் எண்ட்ரி, அவருக்கான பாடல்கள், அவரது எதிராளிகளுடனான மோதல், என்று அனைத்தையும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இப்படத்தை ஒரு மாஸ் படமாக இயக்கியிருப்பதோடு, எந்த இடத்திலும் லாஜிக் மீறாமலும் திரைக்கதை அமைத்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் தொடாத ஒரு இடத்தை தொட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

 

விஐபி முதல் பாகத்தை போல தான் இந்த படத்திலும் ரகுவரனுக்கு ஒரு பிரச்சினை வரும், அதை அவர் எப்படி எதிர்க்கொண்டு வெற்றி பெறுகிறார், என்பதே கதையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க, திடீரென்று டர்னிங்காக திரைக்கதை சமூக பிரச்சினையை நோக்கி பயணிக்க, அந்த பிரச்சினையை ரகுவரன் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் என்பதை ரொம்ப நேர்த்தியாக ல்லியிருக்கும் இயக்குநர், இறுதியில் நிஜத்த்தில் நடந்த ஒரு விஷயத்தை ரொம்ப அழகாக படத்தின் திரைக்கதையோடு சேர்த்து சொல்லியிருப்பது ரசிக்க வைப்பதோடு, நம்மை மீண்டும் சிந்திக்கவும் செய்திருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இரண்டாம் பாகம் மட்டுமல்ல, மூன்றாம் பாகம் எடுத்தால் கூட ரசிகர்களுக்கு பிடிக்கும், என்பதை இந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ நிரூபித்துள்ளது.

 

ஜெ,.சுகுமார்