Aug 05, 2017 08:07 AM

சதுரஅடி 3500

croppedImg_21943386.jpeg

Casting : இனியா, நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா

Directed By : ஜாய்சன்

Music By : கணேஷ் ராகவேந்திரா

Produced By : ரைட் வியூ சினிமாஸ்

சென்னை, ஆக.05 : நிலமோசடி மாபியா பின்னணியில் சொல்லப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படமே ’சதுரஅடி 3500’.

 

 

பெரிய பில்டராக வேண்டும் என்ற கனவோடு, தனது முதல் அடுக்குமாடி கட்டடத்தை கட்டும் ஆகாஷ், நிலமோசடி மாபியாக்களால் மிரட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். உயிரிழந்த ஆகாஷ் ஆவியாக தான் கட்டிக்கொண்டிருந்த கட்டத்தில் சுற்றுவதாகவும், அவரை பலர் அங்கு பார்த்ததாகவும் கூற, இந்த விவகாரம் போலீஸுக்கு வருகிறது. இந்த கேசை கையில் எடுக்கும் ஹீரோ நிகில், ஆகாஷ் பேயாக சுற்றுவது வெறும் வதந்திதான், அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதோடு, அவரை தேடி அலைகிறார்.

 

இதற்கிடையே இனியாவை ஆகாஷ் ஆவி சிறைபிடிக்க, அப்போதும் ஆவி என்பதை நம்பாமல் தொடர்ந்து ஆகாஷுக்கும், இனியாவுக்கும் இடையே என்ன தொடர்பு என்ற கோணத்தில் தனது விசாரணையை மேற்கொள்ளும் நிகில் கண் எதிரே அவ்வபோது ஆகாஷ் தென்படுகிறார். இதனால் குழப்பமடையும் நிகில் ஒரு கட்டத்தில் ஆகாஷ் குறித்து சாமியார் ஒருவரிடம் கேட்க, அவர் சொல்பவை அனைத்தும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்க, ஆகாஷை புதைத்த கள்ளறைக்கு சென்று சோதனை நடத்தும் நிகில் அதிர்ச்சியடைய, பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘சதுரஅடி 3500’ படத்தின் மீதிக்கதை.

 

நிலமோசடி செய்யும் கும்பலால் தொழிலதிபர்களும், மக்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், என்பதன் பின்னணியில் தற்போதைய தமிழ் சினிமா டிரெண்டுக்கு ஏற்றவாறு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜாய்சன்.

 

ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான் ஒரு சில காட்சிகளில் காணாமல் போனாலும், அதிரடி போலீஸாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ நிகில், போலீஸ் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். படத்தில் இரண்டு நாயகிகள் என்பதால் இனியாவுக்கு சிறிய வேடம் தான். இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடமாக இருக்கிறது. ஆவியாக வந்து மிரட்டும் ஆகாஷ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கார், இனியாவை காதலிக்கும் மெக்கானிக் என்று அனைவரும் அவர்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம் தான். பிரான்சிஸின் ஒளிப்பதிவு படம் பார்பவர்களை படபடக்க வைக்கிறது.

 

சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாக இப்படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ள இயக்குநர் ஜாய்சன், எந்த இடத்திலும் கிராபிக்ஸை பயன்படுத்தாமலே நம்மை பயமுறுத்துவதோடு, ஆகாஷ் ஆவியா அல்லது உயிருடன் இருக்கிறாரா, என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி சுவாரஸ்யத்தோடு படத்தை நகர்த்துகிறார். 

 

ஆரம்பத்தில் பேய் பயத்தை காட்டி நகரும் திரைக்கதை பிறகு சஸ்பென்ஸ் திரில்லராக மாற, இறுதியில் ட்விஸ்ட்டோடு முடிவது போல திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் ஜாய்சன், காட்சிகளை கோர்வையாக படமாக்காமல் தவறியிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. 

 

மொத்தத்தில், நல்ல கதைக்களமாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைப்பு போன்றவற்றில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த ‘சதுரஅடி 3500’ சறுக்கிவிட்டது.

 

ஜெ.சுகுமார்