Dec 01, 2017 03:19 PM

'அண்ணாதுரை' விமர்சனம்

43f2b9c1aa2fa1191ad9ee4c6d0b888c.jpg

Casting : Vijay Antony, Mahima, Jewel Marry, Diana Champika

Directed By : G. Srinivasan

Music By : Vijay Antony

Produced By : Fatima Vijay Antony, Raadhika Sarathkumar

 

மாஸ் படங்களில் நடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள், கூடவே இரட்டை வேடங்களிலும் நடிக்க ஆசைப்படுவதுண்டு. அதிலும் சில ஹீரோக்கள் இன்னமும், இரட்டையர்கள் மற்றும் ஆள் மாறாட்டம் என்ற கதைகளத்திலேயே இரட்டை வேட சப்ஜக்கட்டுகளில் நடித்து வருகிறார்கள். தமிழ் சினிமா அடித்து துவைத்த அப்படி ஒரு சப்ஜட்டான இந்த ‘அண்ணாதுரை’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

தாடி வைத்தால் அண்ணன், தாடி இல்லை என்றால் தம்பி என்று அண்ணாதுரை, தம்பிதுரை என்ற இரட்டையர்களான விஜய் ஆண்டனிகளில், அண்ணன் விஜய் ஆண்டணி காதல் தோல்விக் காரணமாக தாடியுடன் எப்போதும் போதையிலேயே வலம் வர, திடீரென்று தம்பியாக மாறி ஆள் மாறாட்டம் செய்கிறார். அது எதனால் என்பது தான் படத்தின் கரு என்றாலும், படத்தில் ஒரு டசன் கதைகள் இருக்கின்றன.

 

எப்படிபட்ட வேடமாக, எந்தமாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும், தான் ஒரே மாதிரிதான் நடிப்பேன், என்று தனது ஒவ்வொரு படங்களிலும் அடம் பிடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த இரட்டை வேடத்திலாவது சிறிது வித்தியாசத்தை காட்டுவார், என்று எதிர்ப்பார்த்தால் நம்மை ஏமாற்றுவதுடன், அவரது நடிப்பால் நம்மை வெறுப்பேற்றவும் செய்கிறார்.

 

இசையமைப்பாளராக புரியாத வார்த்தைகளை பாடல்களில் சேர்த்து, இஸ் டிபரெண்ட், என்று சொல்லும் விஜய் ஆண்டனி, நடிப்பிலும் அதை செய்ய எப்போது தான் முயற்சிப்பாரோ!. சுமாரன கதையைக்கூட தங்களது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு போன்றவற்றால் சூப்பர் படமாக்கும் நடிகர்கள் மத்தியில், சூப்பர் கதைகளை கூட தனது ஒரே மாதிரியான நடிப்பால் சொதப்பும் விஜய் ஆண்டனி, ரசிகர்களை கதறவிடுகிறார்.

 

டயானா சம்பிகா, மஹிமா, ஜுவல் மேரி என்று ஹீரோயின்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். வில்லன்களில் ஒருவராக வரும் ராதாரவியின் வேடம் அநியாயத்திற்கு குட்டியாக இருப்பதோடு மொக்கையாகவும் இருக்கிறது.

 

ஹீரோவாக சொதப்பிய விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் செமயாக சொதப்பி இருந்தாலும், எடிட்டராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஆம், பெரும்குழப்பம் நிறைந்த இந்த படத்தை எடிட்டர் விஜய் ஆண்டனி, 2 மணி நேர படமாக எடிட் செய்து ரசிகர்களை காப்பாற்றிவிட்டார்.

 

எதையோ சொல்ல வந்து, என்ன என்னத்தையோ சொல்லியிருக்கும் இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாசன், ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனிகள் இரட்டை பிறப்பு என்பதையும் மறந்து வசனங்கள் எழுதியிருப்பது செம காமெடியாக உள்ளது.

 

மொத்தத்தில், இந்த ‘அண்ணாதுரை’ தியேட்டருக்குள் போகும் ரசிகர்களை அலறியடித்துக் கொண்டு ஓடவிடுகிறார்.

 

ஜெ.சுகுமார்