Nov 05, 2017 10:09 AM

‘அவள்’ விமர்சனம்

e7c36ac7e8dc2df2d7e60fac7c6fcf8b.jpg

Casting : Sidharth, Andrea, Athul Kulkarnim Suresh

Directed By : Milind Rau

Music By : Girishh

Produced By : Siddharth

 

தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய் படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாக இருக்க, நீண்ட இடைவெளிக்கு பிறகு திகில் அனுபவத்தை தரும் பேய் படமாக வெளியாகியிருக்கிறது ‘அவள்’.

 

மூளை அறுவை சிகிச்சை டாக்டரான சித்தார்த் தனது மனைவி ஆண்ட்ரியாவுடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு வீட்டில் வசிக்கிறார். அவர்களது வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அதுல் குல்கர்ணி தனது குடும்பத்தோடு குடியேறுகிறார். சித்தார்த்துடன் அவர் நட்புடன் பழகி வர, அதுல் குல்கர்ணியின் பெண் சித்தார்த் மீது ஆசைப்படுகிறார்.

 

இதற்கிடையே, அதுல் குல்கர்ணியின் பெண் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதோடு, திடீர் திடீரென்று பைத்தியம் பிடித்தவர் போல நடந்துக்கொள்கிறார். இதனால் அவரை மனநல மருத்துவரிடம் சித்தார்த் அழைத்துச் செல்ல, அவரோ அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறுகிறார். அவரை பிடித்த பேய் யார்? என்பதை அறிய பாதிரியார் முயற்சிக்க, அவர் மீது மட்டும் அல்ல மற்றொருவர் மீதும் பேய் இருப்பதை அவர் அறிகிறார். அது யார்? அந்த பேயின் பிளாஷ் பேக் என்ன? என்பது தான்‘அவள்’ படத்தின் கதை.

 

பல பேய் படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், ‘அவள்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

பேய் படம் என்றாலே பிளாஷ் பேக் கண்டிப்பாக இருக்கும். இந்த படத்திலும் அந்த பிளாஷ் பேக் இருந்தாலும், இயக்குநர் அதை வித்தியாசமாக கையாண்டிருப்பதோடு, பேய் இருக்கிறதா அல்லது அந்த பெண்ணுக்கு ஏற்படும் மாற்றமா? என்பதை யூகிக்காதபடி திரைக்கதையை ரொம்பவே நேர்த்தியாக அமைத்திருக்கிறார்.

 

வித்தியாசமான படங்களை தேர்வு செய்யும் சித்தார்த், தான் கதையின் நாயகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். தன் மீது ஆசைப்படும் அதுல் குல்கர்ணியின் மகளுக்கு ஜாலியாக அறிவுரை கூறும் சித்தார்த், அந்த விஷயத்தை தனது மனைவியிடம் ஷேர் செய்யும் காட்சிகளில் இயல்பான நடிப்பால் அப்ளாஷ் வாங்குகிறார். ஆண்ட்ரியா தனக்கான வேலையை சரியாக செய்திருப்பதோடு, சித்தார்த்துக்கு முத்தமிடும் காட்சிகளில் ரசிகர்களை ஜொல்லு விட வைக்கிறார்.

 

அதுல் குல்கர்ணி, அனிஷா ஏஞ்சலினா, சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரற்கு கச்சிதமாக பொருந்திருப்பதோடு,  இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

கிரிஷின் இசையும், ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் பேயை காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகவே நம்மை மிரட்டுகிறது. “இது தமிழ்ப் படம் தானா!” என்று ஆச்சரியப்படும் விதத்தில் தனது கேமரா மூலம் மேஜிக் செய்திருக்கிறார் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா.

 

ரசிகர்களை மிரட்டும் விதத்தில் திகில் காட்சிகள் நிறைந்திருந்தாலும், நடு நடுவே சித்தார்த் - ஆண்ட்ரியா இடையே நடைபெறும் செல்ல சண்டையும், அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்களும் திரையரங்கில் சிரிப்பு சத்தத்தை கேட்க வைக்கிறது. அதேபோல், வழக்கமான பேய் படங்களைப் போல கதையை நகர்த்தாமல், சில ட்விஸ்ட்டுகளுடன் கதையை நகர்த்தியுள்ள இயக்குநர் மிலிந்த், திகில் பட பிரியர்களுக்கான புல் மீல்ஸாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘அவள்’ மிரட்டலான படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்